ADDED : செப் 19, 2024 07:47 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியில், சாலவாக்கம், குரும்பிரை, நெல்லிமேடு, சீத்தாபுரம், இந்திரா நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள 7 வார்டுகளில், துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் 10 பேர் பணியாற்றுகின்றனர்.
வார்டுகளில் உள்ள பொது இடங்களில் சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் மேற்கொள்ளுதல், நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மற்றும் வீடு வீடாக சென்று மட்கும் குப்பை, மட்காத குப்பையை சேகரித்தல், தரம் பிரித்தல் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.
இப்பணியாளர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில், சாலவாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு நூாலாடை அணிவித்து அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.
சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் அப்பகுதியினருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.