/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாயில் உணவு கழிவுகள் கொட்டி ஹோட்டல்கள்...அட்டகாசம்!:கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை
/
மழைநீர் கால்வாயில் உணவு கழிவுகள் கொட்டி ஹோட்டல்கள்...அட்டகாசம்!:கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை
மழைநீர் கால்வாயில் உணவு கழிவுகள் கொட்டி ஹோட்டல்கள்...அட்டகாசம்!:கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை
மழைநீர் கால்வாயில் உணவு கழிவுகள் கொட்டி ஹோட்டல்கள்...அட்டகாசம்!:கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை
ADDED : டிச 17, 2024 10:42 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் புதிதாக அமைக்கப்படும் மழைநீர் கால்வாய்களில், அருகில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள் கால்வாயை உடைத்து, கழிவுநீரை விடுவது அதிகரித்துள்ளது. “தனியார் ஹோட்டல்களின் இதுபோன்ற விதிமீறல் செயல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் நகரில் உள்ள டி.கே.நம்பித்தெரு, செட்டித்தெரு, காந்திரோடு, காமராஜர் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு ராஜவீதி என, நகரின் முக்கிய சாலைகள், நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சாலைகளின் இருபுறமும், ஐந்து ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் மற்றும் பேவர்பிளாக் கல் பதிக்க, 5 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன.
நெடுஞ்சாலை துறை மட்டுமல்லாமல், மேட்டுத்தெரு, விளக்கடி கோவில் தெரு என, நகரின் முக்கிய இடங்களில், மாநகராட்சி நிர்வாகம் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு மழைநீர் வடிகால்வாய்களை கட்டி வருகிறது.
சாலையில் மழைநீர் தேங்காமல் வடிவதற்காக கட்டப்பட்ட இந்த மழைநீர் கால்வாய்கள், அருகில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளின் கழிவுநீர் திறந்துவிடும் கால்வாயாக மாறிவிட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலை துறையினர், மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு கால்வாயை சுத்தம் செய்ய முயலும்போது, கால்வாய் முழுதும் கழிவுநீராக காட்சியளிக்கிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் டி.கே.நம்பித்தெருவில் உள்ள தனியார் உணவகம் ஒன்று, மழைநீர் கால்வாயின் கான்கிரீட் சுவரை உடைத்து, உணவு கழிவுகளை மழைநீர் கால்வாயில் விட்டுள்ளது.
தொடர்ந்து விதிமீறி செயல்படும் அந்த தனியார் கழிவுநீர் இணைப்பை, மாநகராட்சி நிர்வாகம் துண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதன் காணமாக, மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், நெடுஞ்சாலை துறையும், மாநகராட்சி நிர்வாகமும், மழைநீர் கால்வாயை துார்வாரி வருகின்றனர்.
கால்வாயில் மிளகாய், சாப்பாடு, காய்கறி என, அங்குள்ள உணவகத்தின் கழிவு பொருட்கள் கிலோ கணக்கில் மிதக்கிறது. மழைநீர் கால்வாய் நிரம்பி சாலையில் வெளியேறியதால், ரங்கசாமி குளம் சுற்றிய பகுதிகள் துர்நாற்றம் வீசி வருகிறது.
நெடுஞ்சாலை துறை கட்டிய கால்வாயாக இருந்தாலும், அவற்றை சீரமைப்பதும், விதிமீறல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதும் மாநகராட்சி தான் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. அரசியல் செல்வாக்கு இருப்பதால், நகரின் பல உணவகங்கள் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுகின்றனர்.
டி.கே.நம்பித்தெரு மட்டுமல்லாமல், காமராஜர் சாலை, மேட்டுத்தெரு, பேருந்து நிலையம், ஓரிக்கை, செவிலிமேடு என, அனைத்து இடங்களிலும், மழைநீர் கால்வாயை உடைத்து, அதில் கழிவுநீர் இணைப்பை கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்து, கழிவுநீர் இணைப்பு கொடுத்தவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கி, அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுநீர் விடாதபடி கால்வாயில் சேதமான பகுதி சீரமைக்கப்படும். விதிமீறும் ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நவேந்திரன்,
மாநகராட்சி கமிஷனர்,
காஞ்சிபுரம்.