தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கொசு மருந்து அடிக்க இயந்திரமே இல்லை எப்படி குறையும்?டெங்கு பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அவதி

கொசு மருந்து அடிக்க இயந்திரமே இல்லை எப்படி குறையும்?டெங்கு பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அவதி

கொசு மருந்து அடிக்க இயந்திரமே இல்லை எப்படி குறையும்?டெங்கு பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அவதி


UPDATED : செப் 23, 2026 08:26 PM

ADDED : செப் 23, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 08:26 PM ADDED : செப் 23, 2026 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், 100 ஊராட்சிகளில், கொசு மருந்து அடிக்கும் இயந்திரமே இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அப்புறம் எப்படி டெங்கு பாதிப்பு குறையும் என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை, ஆறு மாதங்கள் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. மழை மற்றும் குளிர் காலமாக இருப்பதால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கமும் அதிகரிக்கிறது. நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த, கொசு மருந்து அடிப்பது மிகவும் அவசியம்.

மாவட்டம் முழுதும் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டாலும், மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், 100 ஊராட்சிகளில், கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் கூட இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நிலையை இப்படி இருந்தால், டெங்கு நோய் தடுப்பு பணிகள் எப்படி முடியும் என, அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரூ.20,000 குறைவு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் நிலையில், ஒவ்வொரு ஊராட்சியும் குறைந்தபட்சம் ஒன்றாவது வாங்கி பயன்படுத்த முடியும்.

சில பெரிய ஊராட்சிகளில் இரண்டு இயந்திரங்கள் இருந்தால், அனைத்து தெருக்களிலும், அவ்வப்போது மருந்து அடித்து கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், இந்த குறைந்தபட்ச வசதியைக்கூட ஏற்படுத்தாமல், பல ஊராட்சிகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுகாதாரத்துறை சார்பில், அவ்வப்போது கொசு மருந்து அடிக்கப்பட்டாலும், அனைத்து கிராமங்களுக்கும் தொடர்ந்து மேற்கொள்ள முடியாததால், அதன் பயன் முழுமையாக கிடைப்பதில்லை.

ஊராட்சிகளே சொந்தமாக இயந்திரங்களை வாங்கி, சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடித்தால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடியும் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு அதிகரிப்பு இந்நிலையில், மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதங்களில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 - 60 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பரில் மட்டும், 103 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலுார், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

பல குடியிருப்பு பகுதிகளில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் அதிகரித்துள்ளதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் இல்லாத ஊராட்சிகளை கண்டறிந்து, அவற்றுக்கு உடனடியாக இயந்திரங்களை வாங்கித் தருவதுடன், அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஒருவர் கூறியதாவது:

கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை மாவட்டம் முழுதும் அதிகப்படுத்தி உள்ளோம். மாவட்டத்தில் 155 பேர் பணியாற்றி வந்த நிலையில், 90 பேரை கூடுதலாக இணைத்துள்ளோம்.

ஊராட்சிகளில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்க அறிவுறுத்தி உள்ளோம். இயந்திரங்கள் இல்லாத ஊராட்சிகளை சில நாட்களில் வாங்கி கொள்ள அறிவுறுத்துவோம்.

எந்த பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கிறதோ அங்கு விழிப்புணர்வு பணிகளையும், தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணிகளில் ஈடுபடுகிறோம். கொசு உற்பத்தியை கட்டுபடுத்தும் பணிகளை தீவிரபடுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us