மாநகராட்சி, நகராட்சிகளில் வளர்ச்சி பணிகள்... புறக்கணிப்பு!ஆட்சி மாறியதால் மக்கள் பிரதிநிதிகள் 'மாயம்' புகாரளிக்க இலவச எண்கள் கலெக்டர் அறிவிப்பு
மாநகராட்சி, நகராட்சிகளில் வளர்ச்சி பணிகள்... புறக்கணிப்பு!ஆட்சி மாறியதால் மக்கள் பிரதிநிதிகள் 'மாயம்' புகாரளிக்க இலவச எண்கள் கலெக்டர் அறிவிப்பு
UPDATED : மே 24, 2026 09:36 PM
ADDED : மே 24, 2026 08:11 PM

காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தலில் த.வெ.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், தி.மு.க., - அ.தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் பலரும், வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வது, அடிப்படை பிரச்னைகளை சரி செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில்லை என, விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சியில் உள்ள பிரச்னைகளை தெரியப்படுத்த, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, புகார் எண்கள் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் என, பலரும் தங்களது தொகுதி மற்றும் துறை வாரியான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி, அதிகாரிகளிடம் கேட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், உள்ளாட்சிகளில் 10 நாட்களுக்கும் மேலாக, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவது, அடிப்படை தேவைகளை மக்களிடம் சென்று கேட்பது என, எந்த வகையிலான பணிகளும் முழுவீச்சில் நடக்காமல், மந்தகதியில் நடந்து வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள், கடந்த மார்ச் 15ல் தொடங்கியது. அது முதல், தேர்தல் முடியும் வரையிலான இரு மாதங்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மக்கள் பிரதிநிதிகள் அதிகாரம், தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேர்தல் பணிகள் முடிந்து மீண்டும் வழக்கமான பணிகள் தொடங்கிய பின்னும், மக்கள் பிரதிநிதிகள் பலரும், மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாதது சலிப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஜூன் மாதம் மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என, மேயர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால், மண்டல கூட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை. அதேபோல, குன்றத்துார், மாங்காடு, ஸ்ரீபெரும்புதுார் போன்ற நகராட்சிகளில் மாதாந்திர கூட்டங்களும் இதுவரை நடைபெறவில்லை.
மாவட்டத்தில் உள்ள குன்றத்துார், உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும், இதுவரை கூட்டம் நடைபெறாமல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து இரு வாரங்கள் ஆன நிலையில், இதுவரை மக்கள் பிரதிநிதிகள் இயல்பு நிலைக்கு வராமல் உள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பிரதான கட்சிகளுமே அதிக எண்ணிக்கையில் நிர்வாகிகள் கொண்டுள்ள நிலையில், மாநில அளவில் த.வெ.க., ஆட்சி அமைந்திருப்பதால், கவுன்சிலர்கள் தங்களுக்கான ஆய்வு பணிகளையும், மக்கள் பிரச்னைகளை கவனிப்பதிலும், அலட்சியம் காட்டுவது தெரியவருகிறது.
நகராட்சிகளில் பாதாள சாக்கடை பிரச்னை, குடிநீர், வரி செலுத்துதல் போன்ற பிரச்னைகளில், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கவனம் செலுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளை புகாராக தெரிவிக்க, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, இலவச புகார் எண்களை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி அமைந்த காரணத்தாலேயே, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் மக்கள் பிரநிதிகள் பலரும், தங்களது பகுதியை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
