சென்னை - பெங்களூரு சாலை பணி மண் சரிவால்... பாதிப்பு!விவசாய நிலங்களில் படிவதால் நெல் பயிரிட சிரமம்
சென்னை - பெங்களூரு சாலை பணி மண் சரிவால்... பாதிப்பு!விவசாய நிலங்களில் படிவதால் நெல் பயிரிட சிரமம்
UPDATED : ஆக 01, 2026 10:16 PM
ADDED : ஆக 01, 2026 08:44 PM
காஞ்சிபுரம்: சென்னை -- பெங்களூரு இடையே அமைக்கப்பட்டு வரும் ஆறுவழி அதிவிரைவு சாலை பணிகள் நீண்டகாலமாக நிறைவடையாமல் உள்ள நிலையில், கோவிந்தவாடி கிராமத்தில் சாலையோர மணல் சரிந்து விவசாய நிலங்களில் படிவதால், நெல் பயிரிட சிரமப்படும் விவசாயிகள், பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை -- பெங்களூரை இணைக்கும் வகையில், 263 கி.மீ., நீளத்திற்கு 7,800 கோடி ரூபாயில் ஆறுவழி அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம், 2012ல் மேற்கொள்ளப்பட்டது. திட்டப் பணிகளில் இதுவரை 230 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
முதலில், 2024 மார்ச் மாதம் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின் 2025 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும் பணிகள் முழுமை பெறாததால், வரும் அக்டோபருக்குள் முடிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ''அரக்கோணம் -- காஞ்சிபுரம் இடையே 25 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், திட்டம் தாமதமாகி வருகிறது,'' என்கின்றனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட சாலையோர கிராமங்களில் புதிய சாலையின் உயரமான கரைப்பகுதிகளில் இருந்து மணல் சரிந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் படிந்து வருகிறது.
குறிப்பாக, கனமழை பெய்யும் காலங்களில் கரைப்பகுதிகள் அரித்து, அதிகளவு மணல் விளைநிலங்களுக்குள் புகுந்து தேங்குகிறது. இதனால், சாகுபடி செய்ய இயலாத நிலை ஏற்படுவதோடு, ஏற்கனவே பயிரிடப்பட்ட நிலங்களும் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்னை குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில், கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல மாதங்களாக தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, அதிவிரைவு சாலை பணிகளை விரைந்து முடிப்பதுடன், சாலையோர கரைப் பகுதிகளில் மணல் சரிவைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புச் சுவர்கள், மழைநீர் வடிகால் வசதிகள் உள்ளிட்ட நிரந்தர தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனரிடம் இதுபற்றி தெரிவிக்கிறேன். விவசாயிகளின் புகார் மனு உள்ளிட்ட விபரங்களையும் அவர்களுக்கு அனுப்புகிறேன். நெடுஞ்சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளை பார்க்க சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வடிகாலை துாற்றிய ஊழியர்கள் அதிவிரைவு சாலையில் இருந்து மணல் சரிந்து விவசாய நிலங்களில் படிவது தீராமல் உள்ளது போல, அருகே உள்ள பாசன வடிகாலை மணல் போட்டு மூடிவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கோவிந்தவாடி அகரம் ஏரியில் இருந்து வரும் வடிகாலில், சாலை பணியாளர்கள் மணல் போட்டு மூடிவிட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால், வடிகால் முழுதும் மணல் மேடாக காட்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். வடிகாலை துார்வாரி சீரமைத்து தர வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். -------------------------நெடுஞ்சாலையில் இருந்து கரைந்து விவசாய நிலங்களில் படிவது பற்றி நாங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து மணலை நாங்கள் அகற்றியுள்ளோம். ஆனால், மணல் கரைந்து வருவதை தடுக்க நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. நெல் பயிரிட முடியவில்லை. விவசாய நிலத்தில் மணல் சரிந்து வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - பி.ராஜமாணிக்கம், விவசாயி, கோவிந்தவாடி.
