/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணி நியமனத்தில்... வசூல் வேட்டை? முட்டி மோதும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்
/
ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணி நியமனத்தில்... வசூல் வேட்டை? முட்டி மோதும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்
ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணி நியமனத்தில்... வசூல் வேட்டை? முட்டி மோதும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்
ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணி நியமனத்தில்... வசூல் வேட்டை? முட்டி மோதும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்
ADDED : நவ 10, 2025 10:53 PM

காஞ்சிபுரம், ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு, துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது. பணி நியமனத்திற்கு வசூல் வேட்டை நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், காஞ்சிபுரத்தில் இரு அலுவலக உதவியாளர்; வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தலா ஒரு அலுவலக உதவியாளர் என, ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணிக்கு, 2,331 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 55 ஊராட்சி செயலர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேற்று முன்தினம் வரை, 5,362 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய மூவர் குழுவினர், பணி நியமனம் செய்யலாம்.
நேர்காணல் அதேபோல, ஊராட்சி செயலர் பணி நியமனத்திற்கு, மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி பிரிவு கலெக்டரின் நேர்முக உதவியாளர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவினர், நேர்காணல் நடத்தி, தகுதி வாய்ந்த ஊராட்சி செயலர்களை நியமிக்க உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், நேர்காணல் நடத்தி முடித்த அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரிகள் கூறும் நபர்களுக்கு மட்டுமே, பணி நியமனம் செய்ய வேண்டும் என்று, கறார் காட்டப்படும் தகவல் கசிந்துள்ளது.
ஆனால், ஆளுங்கட்சியினர் இதை ஏற்க மறுக்கின்றனர். 'நாங்கள் சொல்லும் ஆட்களைத்தான் நியமிக்க வேண்டும்' என, நெருக்கடி தருகின்றனர்.
இதே நிலை தான், ஊராட்சி செயலர்களின் நியமனத்திலும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் வசூல் வேட்டை நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நியாயமான முறை ஊராட்சி செயலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் கூறியதாவது:
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் பணம் கொடுப்போருக்கு மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். அதன்படியே, பேரம் நடந்து வருகிறது.
இருப்பினும், கல்வித் தகுதி அடிப்படையில் முறையாக, நியாயமாக நியமனம் நடக்காதா; நமக்கு வேலை கிடைக்காதா என்ற நப்பாசையில் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அலுவலக உதவியாளர் பணி நியமன குழுவைச் சேர்ந்த எம்.தாணுராஜ் கூறியதாவது:
அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க உள்ளோம். ஒன்றியக் குழு தலைவர்களுக்கு, 15 மதிப்பெண்கள் மட்டுமே உள்ளது. மீதம், தகுதி, எழுத்து தேர்வு ஆகிய மதிப்பெண்கள் அடிப்படையில் நியமிக்க உள்ளோம். முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ஊராட்சி செயலர் பணி நியமனக் குழுவைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி நேர்முக உதவியாளர் வே.ராஜ்குமார் கூறியதாவது:
பத்தாம் வகுப்பில், 85 சதவீத மதிப்பெண், நேர்முக தேர்விற்கு 15 சதவீதம் என, 100 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில், ஊராட்சி செயலர் நியமனம் நடக்க உள்ளது.
நம் மாவட்டத்தை பொருத்தவரையில், 17 பணியிடங்கள் கட்டாயமாக பெண்களுக்கும், 38 பணியிடங்கள் இரு பாலரும் சேர்க்கப்பட உள்ளனர். ஊராட்சி செயலர் நியமன விதிகள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில். நியாயமான முறையில் தேர்வு நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யாரும் ஏமாற வேண்டாம் ''பத்தாம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில், 85 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே, ஊராட்சி செயலர் பணியிடத்திற்கு வாய்ப்பு உள்ளது. அப்படியென்றால், 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். ஆளும் கட்சி மாவட்ட செயலரான நான் பரிந்துரைத்தால்கூட, 15 சதவீதம் மட்டுமே மதிப்பெண் பெற முடியும். மீதி இருக்கும் மதிப்பெண்ணுக்கு எங்கே செல்வது. எனவே, அரசியல் கட்சியினர், வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி பணம் வசூலித்தால், யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். - -கே.சுந்தர் தி.மு.க., மாவட்ட செயலர், காஞ்சிபுரம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,
வசூல் நடத்தியே நியமனம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் நியமனத்தில், பல லகரங்களை தி.மு.க.,வினர் வாங்கிக் கொண்டுதான் பணி நியமனம் செய்தனர். தற்போது, ஊராட்சி செயலர், அலுவலக உதவியாளர் பணிக்கு விலை பேசித்தான் நியமனம் செய்வார்கள். அதற்கான பணிகளும் துவங்கிவிட்டன. இதனால், தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சிக்கலாகும். இதைத் தவிர்க்க அரசியல் கட்சியினரின் பரிந்துரை இல்லாமல், தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். - கே.பிரபாகரன் பா.ஜ., ஒன்றிய தலைவர், அவளூர்.

