/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமானத்தில் மாநகராட்சி...'பல்டி!':மூடு கால்வாய்க்கு மூடு விழா நடத்திய அதிகாரிகள்
/
மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமானத்தில் மாநகராட்சி...'பல்டி!':மூடு கால்வாய்க்கு மூடு விழா நடத்திய அதிகாரிகள்
மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமானத்தில் மாநகராட்சி...'பல்டி!':மூடு கால்வாய்க்கு மூடு விழா நடத்திய அதிகாரிகள்
மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமானத்தில் மாநகராட்சி...'பல்டி!':மூடு கால்வாய்க்கு மூடு விழா நடத்திய அதிகாரிகள்
ADDED : செப் 21, 2024 01:42 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாய் மீது கான்கிரீட் மூடி அமைக்கப்படும் என, மாநகராட்சி கூறிய நிலையில், இருபுறமும் சுவர் மட்டும் கட்டப்படும் எனவும், மூடி அமைக்கப்படாது எனவும், மாநகராட்சி நிர்வாகம் பல்டி அடித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் செல்லும் கால்வாய்களில் அகலமானதும், நீளமானதுமாக மஞ்சள்நீர் கால்வாய் உள்ளது. மன்னராட்சி காலத்தில் வெட்டப்பட்ட இந்த மஞ்சள்நீர் கால்வாய், மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புத்தேரியில் துவங்கும் மஞ்சள்நீர் கால்வாய், கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் சாலை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.
இக்கால்வாயின் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்தும், கழிவுகளால் நிரம்பியும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மோசமான நிலையிலும் இருந்ததால், அவற்றை சீரமைத்து, கால்வாய் மீது மூடி அமைக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி திட்டமிட்டது.
இதற்காக, தமிழக அரசு சார்பில், 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மஞ்சள்நீர் கால்வாயை சீரமைத்து, பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டு, மூடி அமைக்கும் பணிக்கு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, லோக்சபா தேர்தலுக்கு முன் துவக்கி வைத்தார்.
கான்கிரீட் மூலம் கால்வாய் மூடப்பட்டால், அதன் மீது வாகன போக்குவரத்து துவங்கும் எனவும், நகரின் நெரிசலை குறைக்க வாகன 'பார்க்கிங்' திட்டம் போன்றவை கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அதன்பின், மஞ்சள்நீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் துவங்கின. பல்லவர்மேடு, திருக்காலிமேடு, பிள்ளையார்பாளையம் ஆகிய இடங்களில், பொக்லைன் வாகனங்கள் மூலம் கால்வாயை சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்து நடக்கின்றன.
ஆனால், கால்வாய் மீது மூடி ஏதும் அமைக்கப்படாமல், இருபுறமும் பக்கவாட்டு சுவர் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது.
கால்வாய் மீது கான்கிரீட் மூடி அமைப்பதற்கான பணிகள் ஏதும் நடக்காததால், திட்டம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கால்வாய் மீது மூடி அமைக்கும் திட்டத்தை, மாநகராட்சி நிர்வாகம் கைவிட்டுள்ளது' என தெரியவந்துள்ளது.
இதனால், இருபுறமும் பக்கவாட்டு சுவரும், கால்வாய் அடியில் கான்கிரீட் தரையும் மட்டுமே அமைக்க உள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கால்வாய் மீது வாகன போக்குவரத்து, 'பார்க்கிங்' போன்ற எதிர்கால திட்டமின்றி, வழக்கமான சீரமைப்பு பணியாகவே நடக்கிறது.
அதேசமயம், கால்வாய் மீது கான்கிரீட் மூடி அமைக்கப்பட்டால், துார் வாருவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
கால்வாய் மீது கான்கிரீட் மூலம் மூடி அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. அதற்கு, 80 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கீடப்பட்டது.
ஆனால், நடைமுறை சிக்கலால் மூடி அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, இருபுறமும் சுவர் மற்றும் கான்கிரீட் தரை அமைக்கப்படுகிறது.
கால்வாய் மீது மூடி அமைக்கப்பட்டால், உள்ளே சேரும் மற்றும் கழிவுகளை சீரமைக்க முடியாது. அதேபோல், கால்வாய் மீது மூடி அமைத்து, அதன்மீது வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், கனரக வாகனங்கள் செல்ல முடியாது.
தவறுதலாக கனரக வாகனங்கள் சென்று மூடி சேதமாக வாய்ப்புள்ளது. இதனால், அந்த திட்டத்தை கைவிட்டு, கால்வாயை முழுமையாக சீரமைக்க போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.