/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவநிலைமாற்றத்தால் புறநோயாளிகள் அதிகரிப்பு
/
பருவநிலைமாற்றத்தால் புறநோயாளிகள் அதிகரிப்பு
ADDED : டிச 05, 2024 02:14 AM

நடப்பாண்டில் 118 பேர் 'டெங்கு' காய்ச்சலால் பாதிப்பு
காஞ்சிபுரம், டிச. 5--
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை, குளிர் போன்ற பருவகால மாற்றம் காரணமாக, மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளுக்கு, புறநோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. ஏடிஸ் கொசு பரவல் காரணமாக, நடப்பாண்டில் மட்டும் 118 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில், ஐந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 18 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், ஐந்து நகர ஆரம்ப சுகாதார நிலையம், 143 கிராமப்புற துணை சுகாதார நிலையம், 26 நகர துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.
இந்த மருத்துவமனைகளில், சமீப நாட்களாக காய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி போன்றவற்றுக்கு சிகிச்சை பெற புறநோயாளிகளின் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஒரு நாளைக்கு சராசரியாக 3,000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். சமீப நாட்களாக, இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் கூடியிருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பருவகால நோய்கள் காரணமாக, இதுபோன்ற தொந்தரவுகள், மக்களுக்கு வருவதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டாலே, இவற்றை சரிசெய்யலாம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு டெங்கு காய்ச்சலால் பாதித்தோர் எண்ணிக்கை குறைவு.
ஆனாலும், நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை, 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 51 ஆண்களும், 47 பெண்களும், 20 குழந்தைகளும் அடங்குவர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 'ஏடிஸ்' கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். ஆனால், உள்ளாட்சிகளிலும், சுகாதார துறையிலும் எடுக்கும் நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லாததால், ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சலால், நுாற்றுக்கணக்கானோர் பாதிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நுாற்றுக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். இருப்பினும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்கிறது.
டெங்கு காய்ச்சலால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் வசிக்கும் இடங்களை சுத்தம் செய்து, மருத்துவ முகாமிட்டு, வேறு யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதாக, மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:
பருவகால நோய்களாக காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும். குளிர், மழைக்காலங்களில் காய்ச்சல் வருவது இயல்புதான். மருத்துவரை அணுகி இரண்டு, மூன்று நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.
மழைக்காலங்களில் சுத்தமில்லாத குடிநீர், உணவுகளை சாப்பிடும்போது பாக்டீரியா காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படும்.
எனவே, நன்கு வேகவவைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். கொதிக்க வைத்த குடிநீரை அருந்த வேண்டும். டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.
ஒவ்வொரு ஒன்றியத்திலும், தினமும் 10 மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம். டெங்கு காய்ச்சலால் யாராவது பாதிக்கப்பட்டால், உடனடியாக முழு கவனம் செலுத்தி சிகிச்சை அளிப்பதோடு, வேறு யாருக்கும் பரவாத வகையில், அவர் வசிக்கும் பகுதியை முழுமையாக சுத்தம் செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.