ADDED : ஏப் 17, 2026 04:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சியில் 'டெண்டர்' ஓட்டுகள் அதிகரித்து வருகின்றன.
தேர்தலில் ஓட்டளிக்கும் முறைகளில், தபால் ஓட்டு, 'டெண்டர்' ஓட்டு, 'சேலஞ்ச்' ஓட்டு பல வகைகள் உள்ளன. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என, ஒவ்வொரு தேர்தல்களிலும் டெண்டர் ஓட்டு பதிவாகிறது.
ஒருவருடைய ஓட்டானது, வேறு ஒரு நபரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதையே 'டெண்டர்' ஓட்டு என்பர். இந்த 'டெண்டர்' ஓட்டு, உருவ ஒற்றுமையை பயன்படுத்தி பதிவாகும்.
தேர்தல் சட்டம் 1961ன் படி, பிரிவு 49பி பிரிவின்படி, சம்பந்தப்பட்ட உண்மையான வாக்காளர் தன் ஓட்டை, அரசு ஆவணங்களை காண்பித்து பதிவு செய்ய முடியும். ஆனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிக்க முடியாது. மாறாக, '17பி' படிவத்தில் அவர் ஓட்டளிப்பார்.
அவற்றை தனி உறையில் சீலிட்டு, மண்டல அலுவலரிடம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒப்படைப்பர். 49பி முறையில் ஓட்டளித்த 'டெண்டர்' ஓட்டுக்கள் எண்ணப்படாது.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியில், 15 பேர், டெண்டர் ஓட்டு செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் தொகுதியில் ஒருவருடைய ஓட்டை, 15 பேர் மாற்றி செலுத்தியதால், 15 பேர் டெண்டர் ஓட்டு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021ல், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில், ஒருவர் டெண்டர் ஓட்டு செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
