/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தர் பண்பாட்டு மையம் புத்தகரத்தில் நிறுவ வலியுறுத்தல் சட்டசபையில் அறிவித்தபடி செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
புத்தர் பண்பாட்டு மையம் புத்தகரத்தில் நிறுவ வலியுறுத்தல் சட்டசபையில் அறிவித்தபடி செயல்படுத்த எதிர்பார்ப்பு
புத்தர் பண்பாட்டு மையம் புத்தகரத்தில் நிறுவ வலியுறுத்தல் சட்டசபையில் அறிவித்தபடி செயல்படுத்த எதிர்பார்ப்பு
புத்தர் பண்பாட்டு மையம் புத்தகரத்தில் நிறுவ வலியுறுத்தல் சட்டசபையில் அறிவித்தபடி செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 28, 2025 01:26 AM

வாலாஜாபாத்:புத்தகரத்தில், புத்தர் பண்பாட்டு மையம் நிறுவப்படும் என்ற அரசு அறிவிப்பை விரைந்து செயல்படுத்த, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே, செடி, கொடிகள் நிறைந்த பகுதியை சுத்தம் செய்தபோது அங்கு புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்த கற்சிலை 1 அடி உயரம் கொண்ட 16-ம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட புத்தர் சிலையாக கருதப்படுகிறது.
தியானத்தில் அமர்ந்த நிலையிலான அந்த புத்தர் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர், தமிழகத்தில் உள்ள புத்தர் சிலைகளில் பவுத்த அடையாளங்கள் கொண்ட அரிய சிலை இதுவென கண்டறிந்தனர்.
மேலும், புத்தகரத்தில் ஒரு காலத்தில் புத்தர் கோவில் இருந்து அப்பகுதி புத்த விகாரம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் புத்தகரம் என மருவி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால், புத்தகரத்தில் புத்தர் பண்பாட்டு மையம் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதியில் வசிப்போர், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்களிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, புத்தகரம் ஊராட்சி தலைவர் நந்தக்குமார் கூறியதாவது:
புத்தகரத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது பெருமாள் கோவிலில் வைத்து வழிபாட்டில் உள்ளது.
புத்தகரத்தில் புத்தர் பண்பாட்டு மையம் நிறுவ வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைபடி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2023ல், கிராம மக்களுடன் சென்று, காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தோம். அதன் தொடர்ச்சியாக, தமிழக சுற்றுலாத் துறை செயலர், காஞ்சிபுரம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அச்சமயம் புத்தகரம் வந்து புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க ஆய்வு செய்து அதற்கான உறுதி அளித்தனர்.
அதற்காக, 20 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புபடி, புத்தகரத்தில் அதை செயல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.