/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாய் பிடிப்பு வாகனம் வழங்க வலியுறுத்தல்
/
நாய் பிடிப்பு வாகனம் வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 15, 2024 08:53 PM
வாலதாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத் பகுதியில் உள்ள தெருக்களில், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இங்கு கூட்டமாக திரியும் நாய்களால், இப்பகுதிவாசிகள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். மேலும், வாகனங்கள் வரும்போது சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
மேலும், வாகனங்களில் செல்வோரை துரத்திக்கொண்டே வருவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவதும், பள்ளத்தில் விழுந்து காயமடைவது போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்களின் தொல்லையால், குழந்தைகள் சாலையில் விளையாட முடியாத சூழலும், பகுதிவாசிகள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால், வாலாஜாபாத் பேரூராட்சியில், நிரந்தரமாக நாய் பிடிப்பு வாகனம் இயக்கப்பட்டு, தெரு நாய்கள் தொந்தரவை குறைக்க வேண்டுமென, அப்பகுதி வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.