/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிலாம்பாக்கத்தில் அணைக்கட்டு பணி தீவிரம்
/
சிலாம்பாக்கத்தில் அணைக்கட்டு பணி தீவிரம்
ADDED : மார் 07, 2024 12:21 AM

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட சிலாம்பாக்கம் கிராமத்தில், செய்யாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு ஏற்படுத்த, நபார்டு திட்டத்தின் கீழ், 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணைக்கட்டு பணிகள், கடந்தாண்டு துவங்கின.
ஆற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் உயரமும் கொண்டதாக புதிய அணைக்கட்டு கட்டப்படுகிறது. அணைக்கட்டு பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது தண்ணீர் அதிகளவு வந்ததால், பணிகள் தாமதம் ஆகியது.
இதையடுத்து, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், கட்டுமான பணிகள் மேலும் தாமதமாகின.
இந்நிலையில், இரு மாதங்களாக அணைக்கட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆற்றின் குறுக்கே, அணைக்கட்டுக்கு அடித்தளம் அமைக்கும் பணிகள், சுவர் கட்டும் பணிகளில், 25 சதவீத பணிகள் முடிந்திருப்பதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் முடியும் என, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தாண்டு பருவமழைக்குள் பணிகள் முடிந்தால், 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதோடு, 130 விவசாய கிணறுகளில், நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

