/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கம்மாளம்பூண்டி நூலக கட்டடம் சீரமைப்பு பணியில் முறைகேடு?
/
கம்மாளம்பூண்டி நூலக கட்டடம் சீரமைப்பு பணியில் முறைகேடு?
கம்மாளம்பூண்டி நூலக கட்டடம் சீரமைப்பு பணியில் முறைகேடு?
கம்மாளம்பூண்டி நூலக கட்டடம் சீரமைப்பு பணியில் முறைகேடு?
ADDED : ஜன 11, 2025 11:22 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் கம்மாளம்பூண்டி கிராமத்தில், அரசு துணை சுகாதார நிலையம் எதிரே, நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை தினமும் 100க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, கழிப்பறை மற்றும் சாய்தள பாதை வசதி ஏற்படுத்தி தர, வாசகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, நூலக கட்டடத்தில் கழிப்பறை, சாய்தள பாதை, வர்ணம் பூசுதல் ஆகிய வசதிகள் ஏற்படுத்த, கடந்த 2023 --- 24ம் நிதியாண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 1.44 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், இதுவரை சாய்தள பாதை அமைக்காமலும், கழிப்பறை கட்டி, அதற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தாமலும் உள்ளன. முறையாக பணிகளை முடிக்காமல், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டதாக, நூலக கட்டடத்தில் உள்ள தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால், நூலக கட்டடம் சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடாமல், முறைகேடு செய்துள்ளதாக, அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், நூலக கட்டடம் அருகே இருந்த பழைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு, சிமென்ட் கான்கிரீட் பாகங்கள் அகற்றப்படாமல், வாசகர்களுக்கு இடையூறாக உள்ளது.
எனவே, நூலக கட்டடத்தில் சீரமைக்கும் பணியை முழுமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.