தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தென்பெண்ணை - பாலாறை இணைக்க பட்ஜெட்டில் நிதி கிடைக்குமா? 13 ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் விவசாயிகள்

தென்பெண்ணை - பாலாறை இணைக்க பட்ஜெட்டில் நிதி கிடைக்குமா? 13 ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் விவசாயிகள்

தென்பெண்ணை - பாலாறை இணைக்க பட்ஜெட்டில் நிதி கிடைக்குமா? 13 ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் விவசாயிகள்


UPDATED : ஜூலை 22, 2026 06:58 AM

ADDED : ஜூலை 21, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2026 06:58 AM ADDED : ஜூலை 21, 2026 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:தமிழக அரசு, 13 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த, தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் இன்னும் தொடங்கப்படாமல் ஏட்டளவிலேயே உள்ளது. இதனால், திட்டத்தின் மதிப்பு 250 கோடி ரூபாயில் இருந்து, 1,000 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. அடுத்த மாதம், 5ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில், இதற்கான நிதி ஒதுக்கப்படுமா என, விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

வடகிழக்கு பருவமழைக் காலங்களில் இந்த ஆற்றில் பல 100 டி.எம்.சி. அளவிலான உபரி நீர் எந்தவித பயன்பாடும் இன்றி, கடலில் கலப்பதாக நீர்வள ஆதாரத் துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த உபரி நீரை, 35 கி.மீ., நீள கால்வாய் மூலம் செய்யாற்றுக்கு மாற்றி, அதன் வழியாக பாலாற்றுடன் இணைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம்.

இந்த இணைப்பு செயல்படுத்தப்பட்டால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பாலாற்றுப் படுகை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பாசன வசதியும் கணிசமாக மேம்படும் என, விவசாயிகள் நம்புகின்றனர்.

இந்தத் திட்டத்திற்காக, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2013- - 14ல், தமிழக பட்ஜெட்டில், 250 கோடி ரூபாயில் மதிப்பில், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தார்.

ஆனால், திட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக, நீர்வள ஆதாரத் துறை பணிகளை முன்னெடுக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, 2014ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அதன்பின் திட்டம் குறித்து எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியிலும், அதன் பின்னர் தி.மு.க. ஆட்சியிலும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

நான்கு மடங்கு உயர்வு திட்டம் அறிவித்தபோது, 250 கோடி ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு தற்போது, 1,000 கோடி ரூபாயக்கு மேல் உயர்ந்து விட்டதாக, நீர்வள ஆதாரத் துறையினர் கூறுகின்றனர். திட்டம் தொடர்ந்து தாமதமாகும் ஒவ்வொரு ஆண்டும், அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதோடு, பருவமழை வெள்ளநீரும் பயனின்றி கடலில் கலப்பது தொடரும்.

பாலாறு தற்போது பெரும்பாலும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மட்டுமே ஓடும் ஆறாக மாறியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை செய்யாறு வழியாக பாலாற்றிற்கு திருப்பிவிட்டால், ஆண்டு முழுதும் நீர்வரத்து கிடைக்க வாய்ப்புள்ளதாக நீரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம் பாலாற்றுப் படுகையில் நிலத்தடி நீர் செறிவடைவதோடு, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீராதாரமும் வலுப்பெறும்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்து ஆண்டுகளுக்கு முன், தென்பெண்ணை - பாலாறு இணைப்பு சம்பந்தமாக, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்பின், இந்த திட்டம் செயல்படுத்துவது பற்றி, அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டம் பற்றியும், அது தொடர்பான ஆய்வு கூட்டமும் நடக்கவில்லை.

கடந்த 2021ம் ஆண்டில், சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் இத்திட்டம் பற்றி சில இடங்களில் ஆய்வு நடத்தினர். ஆனால், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட் தாக்கல், ஆக., 5ம் தேதி நடக்கும் என, சபாநாயகர் ஜே.சி.டி., பிரபாகர் நேற்று அறிவித்துள்ளார். தமிழக அரசின் முக்கிய நீர்வளத் திட்டங்களில் ஒன்றான, தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும் என, விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். விவசாயிகளின் எதிர்பார்ப்பை தமிழக அரசு உணர்ந்து, திட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

---தென்பெண்ணை - பாலாறு இணைத்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் பெரும்பாலும் நிரம்பும். மூன்று போகம் விளைச்சல் கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, செய்யாறு கரையோரம் வாழும் மக்களும் பயன் பெறுவர். தமிழக அரசு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம். - கே.நேரு, மாநில துணை செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us