காஞ்சியில் சின்னம்மை நோய் தாக்கம் வேகமாக பரவுது! 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 250 பேருக்குமேல் பாதிப்பு
காஞ்சியில் சின்னம்மை நோய் தாக்கம் வேகமாக பரவுது! 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 250 பேருக்குமேல் பாதிப்பு
UPDATED : ஜூலை 10, 2026 12:59 AM
ADDED : ஜூலை 09, 2026 10:50 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் சின்னம்மை நோய் தாக்கத்தால் அவதிப்படுகின்றனர். வேகமாக பரவி வரும் சின்னம்மை நோயை கட்டுப்படுத்த நீர்ச்சத்து காய்கறிகள் மற்றும் நீராகாரம் எடுத்து கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். கோடை மற்றும் மழை காலத்திற்கும் இடைப்பட்ட காலம் தொடங்கி இருப்பதால், தோல் பகுதியை தாக்கும் 'சிக்கன் பாக்ஸ்' என அழைக்கப்படும் 'வெரிசெல்லா ஜோஸ்டர்' என்னும் வைரசால் சின்னம்மை நோய் பரவுகிறது.
இது பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் காற்று மற்றும் நீர் துளிகளின் மூலமாக பரவக்கூடியது. சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் தோல் கொப்புளங்களில் இருந்து வரும் நீர் திரவம் மற்றும் நேரடி தொடர்பு மூலமாக பரவக்கூடும்.
பாதிப்பு
குறிப்பாக, குளிர் காலத்தில் இருந்து, கோடை காலம் தொடங்கும் போதும் மற்றும் கோடை மற்றும் மழை காலத்திற்கும் இடைப்பட்ட காலம் தொடங்கி இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் சின்னம்மை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற நோய் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, சட்டை அணிய முடியாது, உடல் முழுதும் ஒரு விதமான எரிச்சல் உணர்வினை கொடுக்கும், நாக்கு வறட்டும் அளவிற்கு தண்ணீர் தாகம் எடுக்கும் உணர்வினை ஏற்படுத்தும்.
இருப்பினும், இந்த நோய் தொற்று எளிதில் சரி செய்யக்கூடிய தன்மை தான். எனினும், அலட்சியம் காட்டும் பட்சத்தில், உடல் முழுதும் பரவும் போது முகப்பொலிவு இழக்கும் அபாயம் உள்ளது.
இதுபோன்ற நோய் தொற்று ஏற்பட்ட நபர்கள், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இல்லை எனில், வேம்பு, மஞ்சள் அரைத்து உடல் முழுதும் தடவி கொப்பளங்களின் நீர் கோர்வையை வெளியேற்றலாம் என, மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்கம் அதிகரிப்பு
உதாரணமாக, ஸ்ரீபெரும்புதுார், சிறுனை பெருகல், வாலாஜாபாத், குன்றத்துார், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 250க்கும் மேற்பட்டோருக்கு சின்னம்மையின் தாக்கம் அதிகமாக பரவி உள்ளது.இதை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் செந்தில் கூறியதாவது:
தட்ப வெப்ப நிலை மாற்றத்தின்போது சின்னம்மை பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த நோய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும்.
சின்னம்மை நோய் பாதிப்பு உள்ளோர், தன்னைத்தானே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான மருந்து, மாத்திரைகள், அரசு சுகாதார நிலையங்களில் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பாக, வெளியே செல்வோருக்குத்தான் இது போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும். முடிந்த வரையில் தற்காத்துக் கொள்ள வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் யாரும் சின்னம்மையால் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
