/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்...ரூ.672 கோடி: முதல்முறையாக ரூ.85 லட்சம் உபரி வருவாய்;54 அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர்
/
காஞ்சி மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்...ரூ.672 கோடி: முதல்முறையாக ரூ.85 லட்சம் உபரி வருவாய்;54 அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர்
காஞ்சி மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்...ரூ.672 கோடி: முதல்முறையாக ரூ.85 லட்சம் உபரி வருவாய்;54 அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர்
காஞ்சி மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்...ரூ.672 கோடி: முதல்முறையாக ரூ.85 லட்சம் உபரி வருவாய்;54 அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர்
ADDED : மார் 28, 2025 08:18 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின், 2025 - 26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 673 கோடி ரூபாய் வரவினமாகவும், 672 கோடி ரூபாய் செலவினமாகவும் காண்பிக்கப்பட்டு உள்ளது. பற்றாக்குறை இல்லை எனவும், உபரியாக 85 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்கள் சிலவற்றுக்கு புது சாயம் பூசியதுடன் மொத்தம், 54 அறிவிப்புகளை மேயர் மகாலட்சுமி வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, அண்ணா அரங்கத்தின் முதல் மாடியில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், மேயர் மகாலட்சுமி நேற்று தாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், பொது, பொறியியல், வருவாய், பொது சுகாதாரம் மற்றும் நகரமைப்பு என ஐந்து பிரிவுகள் உள்ளன.
இவற்றில் 2025 - 26ம் ஆண்டுக்கான வரவு - செலவினம் குறித்து மேயர் மகாலட்சுமி பட்ஜெட் விபரங்களை, நேற்று வாசித்தார்.
அதன்படி, மாநகராட்சியின் நடப்பாண்டு வரவினமாக 673.2 கோடி ரூபாயாக உள்ளது. செலவினமாக 672.3 கோடியாக காண்பிக்கப்பட்டு உள்ளது.
உபரி நிதியாக, 85.4 லட்சம் ரூபாயாக இருக்கும் எனவும், பற்றாக்குறை இருக்காது எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டம் துவங்கும் முன்பாக, கழிவுநீர் வாகனங்கள் மாநகராட்சியில் சரிவர வருவதில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், பொம்மை கழிவுநீர் லாரியை, கயிறு கட்டி இழுத்து வந்தனர்.
பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகளும், ஏற்கனவே உள்ள சில திட்டங்களுக்கு புது சாயம் பூசிய சில அறிவிப்புகளையும், மேயர் மகாலட்சுமி வெளியிட்டார். மொத்தம் 54 அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அவற்றில் சில:
★ மஞ்சள் நீர் கால்வாய் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. இதன் அருகே, 15 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை வழித்தடம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும்
★ ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட இடங்களில், 400 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனுடன், 25, 26, 28, 51 ஆகிய வார்டுகளில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள, 50 கோடி ரூபாய் அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது
★ புதிதாக 19 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் கட்டப்படும். இதற்கு, 4.75 கோடி ரூபாய் அரசிடம் நிதி கேட்டு பெறப்படும்
★ அண்ணா அரங்கம் உள்ள இடத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்தம், வணிக வளாகம், அண்ணா அரங்கம் ஆகியவை புதிதாக கட்ட, 6 கோடி ரூபாய் மதிப்பில், தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும்
★ சாலையோர வியாபாரம் செய்யும் பகுதிகளை வகைப்படுத்தி, கடை நடத்த தடை செய்யப்பட்ட பகுதி என ஒழுங்குபடுத்தப்படும்
★ மாநகராட்சியில் உள்ள 49 பள்ளிகளிலும், நாற்காலி, டைல்ஸ், சமையல் கூடம், மேஜை உள்ளிட்ட வசதி மேம்படுத்த 6.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
★ நத்தப்பேட்டையில் 75 லட்சம் ரூபாயில், புதிதாக நாய் கருத்தடை சிகிச்சை மையம் கட்டடம் கட்டப்படும்
★ துாய்மை பணியாளர்களுக்கு, காலை நேரத்தில் டிபன், இரவில் பணியாற்றுவோருக்கு டீ வழங்க, நகராட்சி இயக்குனரிடம் அனுமதி பெறப்படும்
★ மண் சாலைகளை தரம் உயர்த்தவும், புதை வடிகால் திட்டத்தால் பழுதான சாலைகளை சீரமைக்கவும், 22.3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
★ வெள்ளைகுளம், ஓ.பி.,குளம் ஆகியவற்றை சீரமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், மூன்று கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
★அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் 8.70 கோடியில் கட்டப்படுகிறது. இந்த நிதி போதுமானதாக இல்லாதால், மேலும் 10 கோடி ரூபாய் அரசிடம் பெறப்படும்
★ மாநகராட்சிக்கு 10 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இருக்கை, மின் சாதனம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ள கூடுதலாக 10 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ள அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது
★ மொத்தமுள்ள 51 வார்டுகளுக்கும், தலா 10 லட்சம் ரூபாய், வார்டு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும். இதற்காக, 5.1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
ஆலோசனை பெறவில்லை
கழிவுநீர் வாகனம், எங்கள் வார்டில் முறையாக வருவதில்லை. அதனாலேயே, பொம்மை வாகனத்தை நாங்கள் எடுத்து வந்தோம். அதேபோல், பட்ஜெட் தொடர்பாக, சுகாதார நிலைக்குழு உறுப்பினர்களிடம் எந்த ஆலோசனையும் பெறவில்லை. பட்ஜெட்டில், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், நிலைக்குழு உறுப்பினர்களை புறக்கணித்துள்ளனர்.
- எம்.புனிதா,
அ.தி.மு.க., கவுன்சிலர்,
காஞ்சிபுரம் மாநகராட்சி
கூடுதல் நிதி தேவை
அறிவித்த திட்டங்கள் மாநகராட்சியில் இந்தாண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். சில பணிகளுக்கு கூடுதல் நிதி வாயிலாக, பணிகளை தொடர உள்ளோம். அந்த நிதி கிடைத்தால், இந்தாண்டு பணிகள் நடக்கும் என்பதாலேயே, பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளியிட்டுள்ளோம்.
மகாலட்சுமி
மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி