/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் பிரச்னையால் திணறும் காஞ்சி ...எங்களால முடியல!:ஒப்பந்த நிறுவனம் தேடும் மாநகராட்சி
/
கழிவுநீர் பிரச்னையால் திணறும் காஞ்சி ...எங்களால முடியல!:ஒப்பந்த நிறுவனம் தேடும் மாநகராட்சி
கழிவுநீர் பிரச்னையால் திணறும் காஞ்சி ...எங்களால முடியல!:ஒப்பந்த நிறுவனம் தேடும் மாநகராட்சி
கழிவுநீர் பிரச்னையால் திணறும் காஞ்சி ...எங்களால முடியல!:ஒப்பந்த நிறுவனம் தேடும் மாநகராட்சி
ADDED : நவ 02, 2025 12:50 AM

காஞ்சிபுரம்: கழிவுநீர் அடைப்பை மாநகராட்சியால் நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், காஞ்சி மக்கள் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கழிவுநீர் அடைப்பை நீக்கும் பணியை, ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில், 40 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம், 1975ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 11 வார்டுகளில், 300 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
கழிவுநீர் குழாய்கள், ஆள் இறங்கு தொட்டிகள் ஆகியவற்றில் ஏற்பட்ட அடைப்பு, கழிவு பொருட்கள் தேக்கம் காரணமாக, பல வார்டுகளில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி, தெருக்களில் ஆறாக ஓடுகிறது.
மாநகராட்சியிடம், கழிவுநீர் அடைப்பை நீக்குவதற்கான நான்கு வாகனங்கள் உள்ளன. அவற்றை கொண்டு நகர் முழுதும் நீடிக்கும் கழிவுநீர் பிரச்னையை, மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை.
சீர்கேடு
குழாய்களில் உள்ள கசடு, கற்கள், துணி, குப்பை போன்ற பொருட்களை முழுமையாக அகற்ற முடியவில்லை. வடகிழக்கு பருவ மழையால் நிலைமை இன்னும் சிக்கலாகி உள்ளது. இதனால், மக்கள் சுகாதார சீர்கேடுகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டில் சில நாட்கள் இதே போன்ற பிரச்னை பெரிதான நிலையில், 'சூப்பர் ஸக்கர்' வாகனங்கள் வாடகைக்கு வரவழைக்கப்பட்டு, சில வார்டுகளில் அடைப்பு நீக்கம் செய்யப்பட்டது.
அதேபோல, அதிக உறிஞ்சும் திறனுள்ள சூப்பர் ஸக்கர் வாகனங்களை பயன்படுத்தி, பாதாள சாக்கடை தொட்டிகள், குழாய்களை சுத்தம் செய்யும் வகையில், மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்த நிறுவனம், அதிநவீன அதிக உறிஞ்சும் திறனுள்ள சூப்பர் ஸக்கர் இயந்திரங்களை பயன்படுத்தும்.
அபராதம்
இந்த பணிகள், 15 நாட்களில் துவங்கிவிடும். பாதாள சாக்கடை திட்டம், மிக பழைய திட்டம் என்பதால், அதில் உள்ள குழாய்கள் இப்போது எங்கும் இல்லை. எனவே, மிகுந்த கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.
அதேபோல், ஹோட்டல்களில் தொட்டி கட்டி, கழிவுநீரை வடிகட்டி வெளியேற்ற அறிவுறுத்தி வருகிறோம். இந்த விதிமு றையை மீறி செயல்படும் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
காஞ்சி பாதாள சாக்கடை திட்டம் 50 ஆண்டுகள் பழமையானது என்பதால், திட்டத்தில் உள்ள பிரச்னைகள் பற்றி தனியார் நிறுவனம் வாயிலாக ஆய்வு நடத்தி வருகிறது.
சில மாதங்களில் அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்படும். அதன்படி, குழாய்களை சீர் செய்யவோ அல்லது புதிதாக மாற்றவோ திட்டமிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இணைப்பு துண்டிப்பு
கழிவுநீரை வெளியேற்ற இணைப்பு பெறாமல், முறைகேடாக இணைப்பு கொடுத்துள்ள வீடுகள், நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வு பணிகள் முடிந்த பின், முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப்படும். அபராதம் விதிப்பதோடு, இணைப்புக்கான 'டிபாசிட்' தொகை வசூலிக்கப்படும்.
- பாலசுப்பிரமணியன், கமிஷனர், காஞ்சி மாநகராட்சி

