தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி குமரகோட்டம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பனிப்பொழிவிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

காஞ்சி குமரகோட்டம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பனிப்பொழிவிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

காஞ்சி குமரகோட்டம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பனிப்பொழிவிலும் பக்தர்கள் பக்தி பரவசம்


ADDED : நவ 29, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 18 ஆண்டுகளுக்குப்பின் இன்று (நவ.,29) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், பனிபொழிவையும் பொருட்படுத்தாமல், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவில் ராஜகோபுரம், கிழக்கு கோபுரம் பிற சன்னதிகள் பொலிவிழந்தும், சிதிலமடைந்தும் இருந்தது.

எனவே, இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ராஜகோபுரம், கிழக்கு கோபுரம், உட்பிரகார சன்னிதிகள் என, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில், வேதவிற்பன்னர்கள் பிரபாகர் குருக்கள் காமேஸ்வர குருக்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மூலம் யாசாலை பூஜைகள் நடந்து வந்தன.

இதில், ஐந்தாவது நாளான இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 4:50 மணிக்கு, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய சங்கராச்சாரியார் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் திருவம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், பக்தர்களின் ‛அரோகரா’ ‛அரோகரா’ கோஷங்களுக்கு இடையே வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

இதில், 18 ஆண்டுகளுக்குப்பின் நடந்த கும்பாபிஷேக விழாவில், பனிபொழிவையும் பொருட்படுத்தாமல், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்திபரவசத்துடன் பங்கேற்றனர்.

மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, உத்திரமேரூர் த.வெ.க., எம்.எல்.ஏ., முனிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக நிகழ்வுகளை பேராசிரியர் ஞானசம்பந்தன் நேரடி வர்ணணை செய்தார். கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் எஸ்.பி., அரவிந்தன் தலைமையில், 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் திருப்பணி உபயதாரர்கள் மற்றும் கும்பாபிஷேக பொறுப்பாளர்களான பிரிம்மிங் ஸ்கூல் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் பச்சையப்பன் பிரபு, கவுரி ஜூவல்லரி உரிமையாளர் நவீன்குமார், ஜோதீஸ் ரெசிடென்சி முருகேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.

சங்கராச்சாரியார் அருளாசி


காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் அரசின் ஒத்துழைப்போடு விமரிசையாக நடைபெற்றதாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய சங்கராச்சாரியார் விஜயேந்திரர்:
காஞ்சியில் தந்தை ஏகாம்பரநாதருக்கும், தாய் காமாட்சி அம்மனுக்கும் இடையே முருகன் வீற்றிருப்பது 'சோமாஸ்கந்த மூர்த்தி' அமைப்பை நினைவுபடுத்துகிறது. இது பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிகப் பலனைத் தரும்.
கடந்த 1989ம் ஆண்டு மகா பெரியவா திருவுள்ளப்படி புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, அவரது திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தினசரி பூஜைகளும், கோவில் பராமரிப்பும் சிறப்பாக நடைபெறுவது பாராட்டுக்குரியது.
பக்தர்கள் மற்றும் அரசின் ஒத்துழைப்போடு இந்த கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் சகல சவுபாக்கியங்களையும் பெற்று வாழ முருகன் அருள்புரிய வேண்டும்.
இவ்வாறு சுவாமிகள் அருளாசி வழங்கினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us