/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் காஞ்சி பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி
/
குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் காஞ்சி பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி
குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் காஞ்சி பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி
குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் காஞ்சி பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 19, 2024 09:40 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில், பி.எஸ்.சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பொங்கல் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது.
மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள், சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்ய, பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை திறந்துள்ளனர்.
அப்போது, குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த போது, தரைக்கு கீழ் அமைக்கப்பட்ட, 'சம்ப்' எனப்படும் கீழ்நிலை குடிநீர் தொட்டியின் இரும்பு சிலாப் மீது போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
சிலாப்பை திறந்து பார்த்தபோது, நாய் ஒன்று அழுகிய நிலையில் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகனிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனே, மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்த நாயை அப்புறப்படுத்தினர்.
கீழ்நிலை தொட்டி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடரை துாவி சுத்தம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு என தனியாக சுற்றுச்சுவர் வசதி இல்லை; இரவு நேர காவலரும் இல்லை. கண்காணிப்பு கேமரா வசதியும் இல்லை.
பிரதான நுழைவாயில் கேட் எப்போதும் திறந்தே இருக்கும்.
இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதே வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றமும் இயங்கி வருகிறது.
மேலும், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர், 'சிசிடிவி' கேமரா, இரவு நேர காவலர் நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் நாயை கொன்று, வீசிய மர்ம நபர்களை பிடித்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.