/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி - வாலாஜாபாத் இடையே புறவழிச்சாலை திட்டம்: செவிலிமேடு துவங்கி வெண்குடியில் இணைக்க ஆலோசனை
/
காஞ்சி - வாலாஜாபாத் இடையே புறவழிச்சாலை திட்டம்: செவிலிமேடு துவங்கி வெண்குடியில் இணைக்க ஆலோசனை
காஞ்சி - வாலாஜாபாத் இடையே புறவழிச்சாலை திட்டம்: செவிலிமேடு துவங்கி வெண்குடியில் இணைக்க ஆலோசனை
காஞ்சி - வாலாஜாபாத் இடையே புறவழிச்சாலை திட்டம்: செவிலிமேடு துவங்கி வெண்குடியில் இணைக்க ஆலோசனை
ADDED : ஜன 04, 2025 01:08 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வாலாஜாபாத் இடையே, பாலாற்றை ஒட்டி புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கிறது. இதன் வாயிலாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் என, இரு நகர்ப்பகுதிக்குள் செல்லாமலேயே தாம்பரம், சென்னை, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு செல்ல முடியும் என, எஸ்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், ஆன்மிகம், கல்வி நிறுவனங்கள், சாலைகள் என, பல்வேறு வகையிலான வளர்ச்சி திட்டங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை - பெங்களூரு விரைவு சாலை, பரந்துார் விமான நிலையம் போன்ற மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், சரக்கு போக்குவரத்தும், மக்கள் பயன்பாடுக்கும் தேவையான புதிய சாலைகள் தேவைப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் புதிய சாலைகள் தேவையோ, அங்கெல்லாம் புதிய சாலைகள் அமைக்க வேண்டிய அவசியத்தை, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில், வாலாஜாபாத் அருகேயுள்ள வெண்குடியிலும், காஞ்சிபுரம் செவிலிமேடிலும் ஏற்கனவே புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூரில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
அடுத்தகட்டமாக, காஞ்சிபுரம் செவிலிமேடில் இருந்து வாலாஜாபாத் அருகேயுள்ள வெண்குடி வரையிலான 10 கி.மீ., துாரத்திற்கு, பாலாற்றை ஒட்டி புறவழிச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடுகிறது.
அதாவது, காஞ்சிபுரம் அருகேயுள்ள செவிலிமேடு பகுதியில் துவங்கி, ஓரிக்கை, அய்யம்பேட்டை, வில்லிவலம், திம்மராஜாம்பேட்டை வழியாக, வெண்குடியில் உள்ள புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் இச்சாலை அமைக்க திட்டமிடப்படுகிறது.
புதிதாக இந்த புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக, கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட போலீஸ் எஸ்.பி., சண்முகம் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இச்சாலை வாயிலாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என, போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகம் கூறியதாவது:
புதிதாக திட்டமிடப்படும் புறவழிச்சாலை வாயிலாக, செய்யாறு சிப்காட்டில் இருந்து வரும் வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் வந்து, பெரியார் நகர் வழியாக வாலாஜாபாத் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
நேரடியாக செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக, வில்லிவலம், திம்மராஜாம்பேட்டை வழியாக வெண்குடி புறவழிச்சாலையை அடையும் வகையில் திட்டமிடப்படுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டரிடமும் ஆலோசித்துள்ளோம்.
இந்த புதிய சாலை அமையும் இடத்தில், குறைவான வீடுகளே உள்ளன. இதனால், சாலை அமைவதிலும் சிக்கல் இருக்காது. எதிர்காலத்தில் பரந்துார் விமான நிலையம் அமைந்தால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேலும் நெரிசலாக மாறும்.
அப்போது, சென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு காஞ்சிபுரம் வழியாக செல்ல இந்த சாலை பயன்படும். செவிலிமேடு - கீழம்பி இடையேயான சாலை நான்கு வழியாக மாற்றப்பட உள்ளது.
இதனால், கீழம்பி, செவிலிமேடு வழியாக காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் நகருக்குள் செல்லாமலேயே தாம்பரம், ஒரகடம் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புறவழிச்சாலை திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளோம். அரசுக்கு இதுபற்றி இனி தான் கருத்துரு அனுப்ப உள்ளோம்.
கலைச்செல்வி,
கலெக்டர்,
காஞ்சிபுரம்.