/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம், குன்றத்துாரில் காசநோய் பாதிப்பு அதிகம்
/
காஞ்சிபுரம், குன்றத்துாரில் காசநோய் பாதிப்பு அதிகம்
காஞ்சிபுரம், குன்றத்துாரில் காசநோய் பாதிப்பு அதிகம்
காஞ்சிபுரம், குன்றத்துாரில் காசநோய் பாதிப்பு அதிகம்
ADDED : செப் 20, 2024 08:41 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022ல் காசநோயால் பாதிக்கப்பட்டோரில், 88 சதவீதம் பேரும், 2023ல், 86.6 சதவீதம் பேரும் குணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் காளீஸ்வரி கூறியதாவது:
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், சத்து குறைபாடு உள்ளோருக்கு இந்த நோய் எளிதாக பாதிக்கும். மாலை நேர காய்ச்சல், தொடர் இருமல், எடை குறைதல், பசியின்மை போன்ற அறிகுறிகள் காசநோயாக இருக்கும்.
இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள், சளி பரிசோதனை, எக்ஸ்-ரே ஆகிய பரிசோதனை மூலம் காசநோயை கண்டறியலாம். நோய் உறுதியானால், 6 மாதம் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை எடுத்தால், முற்றிலும் குணமாக்கலாம்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில், 89 சதவீதம் வரை குணமாக்கி உள்ளோம்.
இந்த நோய் மூளை, முதுகெலும்பு ஆகிய பகுதிகளிலும் வரலாம். இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து, தாம்பரம் சானடோரியத்தில், நெஞ்சக பிரிவுக்கு, 700 படுக்கை கொண்ட தனி அரசு மருத்துவமனை உள்ளது. உள்நோயாளிகள் அங்கு சிகிச்சை எடுக்கலாம்.
மாவட்ட அளவில் இறப்பு சதவீதம் 5 ஆக பதிவாகியுள்ளது. அதை குறைக்க முயற்சிக்கிறோம். இந்த நோய்க்கு தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மருந்து பெற கட்டணம் கிடையாது.
நோய் பாதித்த அனைவருக்கும், மாதம் 500 ரூபாய் அரசு சார்பில், ஊட்டச்சத்துக்காக வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் காசநோய் டெஸ்ட் எடுக்க பலரும் தயங்குகின்றனர்.
அவ்வாறு தயங்குவதால், பின்னாளில் நோய் தீவிரமடைந்து பாதிக்கின்றனர். நோய் உறுதியானால், மாத்திரைகள் எடுத்துக்கொண்டு குணமாக்கிவிடலாம். எங்களிடம் உள்ள எக்ஸ்-ரே எடுக்கும் வாகனம் மூலமாகவே, 150 பேருக்கு காசநோய் இருந்ததை கண்டுபிடித்தோம்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், காஞ்சிபுரத்தில் அதிக நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறத்தில் அதிக காசநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.-------------------------------------