/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை
/
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை
ADDED : நவ 03, 2024 01:44 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் எட்டு நாட்கள் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், கோவிலில் உள்ள கொடி மரம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், நடப்பு ஆண்டு கந்தசஷ்டி சூராசம்ஹார விழா மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறாது.
இருப்பினும் கந்தசஷ்டி விழாவையொட்டி நவ., 2 முதல் 7 வரை, காலை 7:00, 9:00, 11:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறும் என, கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, நேற்று காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. முன்னதாக, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிேஷக அலங்காரம், மஹாதீபாராதனை நடந்தது.லட்சார்ச்சனை நடைபெறுவதால், கோவிலுக்குள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், உட்பிரகாரத்தை சுற்றிவர பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றிவர அனுமதிக்கப்பட்டனர். லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி ஆண்டவர் கோவில் கந்தசஷ்டி விழா துவக்கம்: பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழநி ஆண்டவர் கோவிலில், 15வது ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகத்துடன் துவங்கியது.
மாலை 6:00 மணிக்கு விநாயகர் வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும், மாலை முருக பெருமான் வீதியுலாவும், தொடர்ந்து தாருகாசூரன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது.
மூன்றாம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலில் இருந்து 108 வேல் தரித்து, 108 பால்குடம் வீதியுலாவும், மாலை சிங்கமுகா சூரன் வதம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது.
நாளை காலை 11:00 மணிக்கு அபிேஷக ஆராதனயும், மாலை அக்னிமுகன் வதம் செய்யும் நிகழ்வும், 5ம் தேதி மாலை வஜ்ஜிரவாகு வதம் செய்யும் நிகழ்வும், 6ம் தேதி மாலை முருகபெருமான் வீதியுலாவும், சூரன், தன் பூத சேனைகளுடன் திக்விஜயம் செய்யும் நிகழ்வும், பானுகோபன் வதம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது.
வரும் 7ம் தேதி காலை 8:00 மணிக்கு அரசு காத்த அம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் பெறும் நிகழ்வும், இரவு வீரவாகு துாது, சூரசம்ஹாரமும் விமரிசையாக நடைபெறுகிறது. மறுநாள் 8 ம் தேதி மாலை தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐந்து தெருவாசிகள் மற்றும் இளைஞர் அணியினர் செய்துள்ளனர்.
வல்லக்கோட்டை: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா துவங்கியது முதல் நாளான நேற்று, மூலவர் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க பால் குட அபிஷேகம் நடந்தது.
கோவில் நிர்வாகம் சார்பில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
l காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
அதே கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத முருகபெருமான் கோவில் உள்ளது.
இங்கு நேற்று, கந்த சஷ்டி பெருவிழா வெகுவிமரிசையாக துவங்கியது. நவ., 7ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியுடன் சஷ்டி பெருவிழா நிறைவு பெற உள்ளது. நவ.,8 ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் மற்றும் இரவு, 9:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில் மயில் வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.