ADDED : ஜன 02, 2024 04:24 AM

-இடையூறான தடுப்பு அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெரு நுழைவாயில்பகுதியில், கொரோனா ஊரடங்கின் போது சாலையோரத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் தடுப்பு இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.
சாலை தடுப்பில் உள்ள இரும்பு போல்டு சாலை பக்கம் நீட்டிக் கொண்டு உள்ளது. இதனால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை வளைவில் திரும்புபோது இரும்பு 'போல்டில்' இடித்துக் காயமடைகின்றனர்.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் உள்ள தடுப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார், காஞ்சிபுரம்.
குண்ணவாக்கத்திற்கு பஸ் வேண்டும்
உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கத்திலிருந்து, காஞ்சிபுரம் செல்ல நேரடி அரசு பேருந்து வசதி இல்லை. இதனால், குண்ணவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், 10 கி.மீ., துாரத்தில் உள்ள திருப்புலிவனத்திற்கு சென்றுதான், உத்திரமேரூர், செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரத்தில் பேருந்தில் செல்ல வேண்டும்.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, குண்ணவாக்கத்தில் இருந்து, மருதம், திருப்புலிவனம் வழியாக, காஞ்சிபுரம் அரசு பேருந்து இயக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.
----------பராமரிப்பு இல்லாத கழிப்பறை
காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் எண்.2, 4 ஆகிய இரு இணை சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வீடு, மனை, என, சொத்து வாங்கும் நுாற்றுக்கணக்கானோர் பத்திரப்பதிவு செய்ய வந்து செல்கின்றனர்.
இதில், முதல் மாடியில் இயங்கும் எண்.4 இணை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருவோருக்கு என கட்டப்பட்டுள்ள கழிப்பறை, முறையான பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பத்திரப்பதிவுக்காக நீண்டநேரம் காத்திருக்கும் முதியோர், பெண்கள் இயற்கை உபாதை கழிக்க சிரமப்படுகின்றனர்.
எனவே, கழிப்பறையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.
