/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராஜினாமா சர்ச்சையிலிருந்து காஞ்சி மேயர்...எஸ்கேப்! :அதிருப்தி கவுன்சிலர்களை சரிக்கட்ட மும்முரம்
/
ராஜினாமா சர்ச்சையிலிருந்து காஞ்சி மேயர்...எஸ்கேப்! :அதிருப்தி கவுன்சிலர்களை சரிக்கட்ட மும்முரம்
ராஜினாமா சர்ச்சையிலிருந்து காஞ்சி மேயர்...எஸ்கேப்! :அதிருப்தி கவுன்சிலர்களை சரிக்கட்ட மும்முரம்
ராஜினாமா சர்ச்சையிலிருந்து காஞ்சி மேயர்...எஸ்கேப்! :அதிருப்தி கவுன்சிலர்களை சரிக்கட்ட மும்முரம்
ADDED : ஜூலை 05, 2024 12:24 AM

காஞ்சிபுரம்:கோவை, நெல்லை மேயர்கள் பதவி விலகிய நிலையில், அடுத்து காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி ராஜினாமா செய்வார் என பேசப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் ஆதரவு, உளவுத்துறை தகவல்கள் அவரை சர்ச்சையிலிருந்து தற்போதைக்கு காப்பாற்றியுள்ளன. இருப்பினும், எதிர்ப்பு கவுன்சிலர்கள், மேயரை மாற்றியே தீர வேண்டும் என, அடுத்தக்கட்ட நகர்வுக்கு காய் நகர்த்த உள்ளனர். இந்நிலையில், அதிருப்தி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று முக்கியத்துவம் கொடுக்கத் தயாராக உள்ளேன் என, மேயர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 51 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமியும், துணைமேயராக காங்., கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர். மேயர் மகாலட்சுமி மீது அ.தி.மு.க., மட்டுமல்லாமல், தி.மு.க.,- - காங்., - சுயேட்., என, 33க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
நெருக்கடி
காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கும், கவுன்சிலர்களிடையே எழுந்த அதிருப்தி காரணமாக, கடந்த மாதங்களில், மாநகராட்சி கூட்டத்தை சரிவர நடத்த முடியாமல் போனது. தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால், கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேயர் மகாலட்சுமி மற்றும் கவுன்சிலர்களிடையேயான பிரச்னை அதிகமானதால், கலெக்டர் கலைச்செல்வியிடம், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - சுயேட்சை, என, 33 பேர் மனு அளித்தனர்.
கவுன்சிலர்கள் மேயரை மாற்ற வேண்டும் எனக் கேட்டதால், அமைச்சர் நேரு, மாவட்ட செயலர்சுந்தர் ஆகியோர் சமாதானம் செய்தனர்.
இருப்பினும், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திங்கட்கிழமை 10 கவுன்சிலர்களும், நேற்று முன்தினம் நான்கு கவுன்சிலர்கள் என, 14 கவுன்சிலர்கள், தங்களது நிலைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
மாநகராட்சியில் உள்ள 6 நிலைக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள கவுன்சிலர்களில், 14 பேர் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். 2வது மண்டலக் குழு தலைவர் சந்துரு மீதான தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதாக, ஏழு கவுன்சிலர்கள்,கமிஷனர் செந்தில்முருகனிடம் நேற்று கடிதம் அளித்துள்ளனர்.
எதிர்ப்பு கவுன்சிலர்கள், இதுபோன்று நெருக்கடியை மேயருக்கு கொடுப்பதை தொடர்கின்றனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - சுயேட்சை என, 33 கவுன்சிலர்கள் திடீரென, மேயர் மகாலட்சுமியை மாற்ற, நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டு, கலெக்டர் கலைச்செல்வியிடமும், கமிஷனரிடமும் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
அவர்கள் மனு அளித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி கூட்டம் இன்னும் நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
அடுத்து, காஞ்சிபுரம்மேயர் மகாலட்சுமி பதவி விலகுவதாக பேசப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா செய்வதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேயர் மகாலட்சுமி நேற்று முன்தினம் அலுவலகம் சென்று, லோகேஷ்குமார் என்பவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கி, வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மாநகராட்சியில் நடக்கும்பிரச்னைகள் பற்றிய உண்மை நிலவரம் குறித்து, சில மாதங்களாகவே, உளவுத்துறையின் தகவல்கள் அரசுக்கு சென்றபடி உள்ளன. அவற்றையும் அரசு நிர்வாகம் கவனத்தில் எடுத்துள்ளது.
பணிக்கு தடையில்லை
குறிப்பாக மேயரை மாற்ற, கட்சி மேலிடம் விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற காரணங்களாலேயே, மேயர் மகாலட்சுமியிடம் ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடம் கேட்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், 'தான் மேயர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும், கட்சி மேலிடமும் ராஜினாமா செய்ய அறிவுறுத்தவில்லை' எனக் கூறி, அவரை பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து மேயர் மகாலட்சுமி கூறியதாவது:
அனைத்து கவுன்சிலர்களுக்கும் உரிய மரியாதை அளித்து வந்தேன். கவுன்சிலர்களின் இந்த பிரச்னையை எதிர்பார்க்கவே இல்லை. மேயர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
கட்சி தலைமை அல்லதுஅமைச்சரிடம் இருந்து யாரும் ராஜினாமா கடிதம் என்னிடம் கேட்கவில்லை. வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்டு, வார்டுகளுக்கு பல்வேறு பணிகள் செய்துள்ளோம். ஆனால், கவுன்சிலர்கள் பணி செய்யவில்லை என்கின்றனர்.
சாலை, மழைநீர் வடிகால் போன்றவை புதிதாகஏற்படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி துறைக்கு அனுப்புகிறோம்.
ஆனால், குடிநீர் பணிகள் புதியதாக மேற்கொள்ள இருப்பதால், சாலை அமைக்க அனுமதியில்லை என துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு, நான் என்ன செய்ய முடியும்.
வார்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு நான் தடையாகஇருப்பதில்லை. ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை பணிகள் நடந்திருக்கிறது என்ற விபரம் என்னிடமும், கவுன்சிலர்களிடமும்உள்ளது. ஆனால், கவுன்சிலர்கள் தவறாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
என் கணவரின் ஆதிக்கம்இருப்பதாக தெரிவிக்கின்றனர். அவர் தலையீடு எங்கும் இருப்பதில்லை. கோப்புகள் அனைத்தும் நான்தான் கவனிக்கின்றேன்.
உலக வங்கி பிரதிநிதிகள் காஞ்சிபுரம் வந்தபோதும், திட்டம் குறித்து நானே விளக்கி, திட்டத்திற்கான நிதியை பெற முயற்சி செய்தேன். புதிய மாநகராட்சி அலுவலகத்திற்கு, என் கணவர் வருவது வெகுவாகக் குறைந்துவிட்டது.
அதேபோல, எல்.இ.டி., விளக்குகள் அமைத்ததில் ஊழல் நடந்திருப்பதாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுதும் ஒரே மாதிரியான எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை. விளக்குகள் எரிவதில் குறைபாடு இருந்தால் உடனடியாக சரி செய்யப்படும்.
நிர்வாக சிக்கல்
ஒவ்வொரு வார்டிலும் தலா 50 லட்ச ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டாலேயே பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
ஆனால், 637 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் போன்றவை புதியதாக மேற்கொள்ள இருப்பதால், புதிதாக சாலை அமைக்க முடியாமல் உள்ளது.
நிர்வாக ரீதியான சிக்கல் இது. இதை கவுன்சிலர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிருப்தி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று முக்கியத்துவம் கொடுக்கத் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.