/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கார்த்திகை மாவளி விற்பனை
/
காஞ்சியில் கார்த்திகை மாவளி விற்பனை
ADDED : டிச 14, 2024 01:18 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று மூன்று நாட்கள் மாலை நேரத்தில், வீடு, கடை, கோவில்களிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடுவர். அப்போது சிறுவர்கள் கார்த்திகை மாவளிக்கு தீ மூட்டி, கயிற்றில் கட்டி, சுற்றி விளையாடுவர்.
அப்போது, மாவளியில் இருந்து உதிரும் தீப்பொறிகள், பூக்கள் போலவும், மீன்கள் நீந்துவதைப்போன்று வட்ட வடிவத்தில் பறந்து செல்வதை பார்த்து மகிழ்வர். சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் மாவளியை ஆர்வத்துடன் சுற்றுவர்.
கார்த்திகை தீபத்தையொட்டி காஞ்சிபுரம் வந்தவாசி சாலையல் ,ஒரு மாவளி 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் மாவளியை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து மாவளி விற்பனை செய்த மாங்கால் கிராமத்தை சேர்ந்த ஆர்.மணிகண்டன் கூறியதாவது:
கடந்த மாதம் மாவளி செய்யும் பணியை துவக்கினேன். கார்த்திகை தீபத்திற்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாவளியை சுற்றுவோர் ஆண்டுதோறும் ஆர்வத்துடன் மாவளி வாங்கிச்செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவளி தயாராவது எப்படி?
பனைமரத்தின் உலர்ந்த பூக்களை பறித்து அதை தீயிட்டு கொளுத்தியபின், அதை துகள்களாக்கி, அதனுடன் அடுப்பு கரி துகள்களையும் கலந்து, துணியில் வைத்து, உருண்டை போல சுற்றுவர். பின், மூன்றாக பிரிக்கப்படும் பச்சை பனை ஓலை மட்டைக்குள், துணி உருண்டையை வைத்து, கயிற்றால் மேலும், கீழும் இறுக்கமாக கட்டுவர். இதன் மேல்புறம், நீண்ட கயிற்றை கட்டி, துணி உருண்டையின் மேல், நெருப்பு மூட்டி, கையில் கயிற்றை பிடித்து சுற்றுவதை கார்த்திகை மாவளி சுற்றுதல் என, கூறப்படுகிறது.