/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிதிரிப்பேட்டை ரயில் சிக்னல் மாற்றி அமைக்கும் பணி துவக்கம்
/
கிதிரிப்பேட்டை ரயில் சிக்னல் மாற்றி அமைக்கும் பணி துவக்கம்
கிதிரிப்பேட்டை ரயில் சிக்னல் மாற்றி அமைக்கும் பணி துவக்கம்
கிதிரிப்பேட்டை ரயில் சிக்னல் மாற்றி அமைக்கும் பணி துவக்கம்
ADDED : நவ 02, 2024 01:02 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் புறவழிச் சாலைக்கு, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, சிக்னல் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ராஜவீதி வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, சதுக்கம் வழியாக வாலாஜாபாத் - வண்டலுார் சாலை வழியாக, தாம்பரம் செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
ஒரே நேரத்தில், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் எதிர் வரும் வாகனங்கள் மற்றும் டிப்பர் லாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், வாலாஜாபாத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், 141.59 கோடி ரூபாய் புறவழிச் சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு சாலை விரிவுபடுத்தும் பணி துவங்கியது.
குறிப்பாக, செங்கல்பட்டு பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் புளியம்பாக்கம் கிராமம் அருகே, துவங்கும் மேம்பாலத்தின் மீது ஏறி, ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை வழியாக வெங்குடி கிராமத்தில் இறங்கி செல்லும்.
அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள், வெங்குடி கிராமத்தில் துவங்கும் மேம்பாலத்தின் மீது ஏறி, கிதிரிப்பேட்டை, ஊத்துக்காடு, புளியம்பாக்கம் மேம்பாலத்தின் வழியாக, இறங்கி செல்லும்.
இந்த பை - பாஸ் சாலை போடும் பணி கடந்த மார்ச் மாதம் நிறைவு செய்திருக்க வேண்டும்.
பை - பாஸ் சாலை போடும் பணி ஒப்பந்தம் எடுத்தவருக்கு, மேம்பாலங்கள் ஏறும் இடம் மற்றும் இறங்குமிடங்களில் மண்ணை கொட்டி நிரப்புவதற்கு மண் கிடைக்காததால், மேம்பாலம் போடும் பணி மற்றும் சாலை போடும் ஆகிய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, ரயில்வே துறை நிர்வாகம், சிக்னல் கொடுக்கும் கேபிள் மாற்றம் செய்யாததால், பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக நெடுஞ்சாலைத் துறையினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இதை ஏற்று, ரயில்வே துறை நிர்வாகம், கிதிரிப்பேட்டை ரயில் கடவுப்பாதையோரம் இருக்கும் சிக்னல் கம்பங்களில் இருக்கும் கேபிள்களை மாற்றி அமைக்கும் பணிக்கு, பிளாஸ்டிக் பைப் புதைக்கும் பணி துவக்கி உள்ளனர்.
இந்த பணிகள் நிறைவு பெற்ற பின், ரயில் இருப்புப்பாதையை ஒட்டி இருக்கும் சிக்னல் கம்பங்களை மாற்றி அமைத்ததும், மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கப்படும் என, ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

