/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் திறன் பயிற்சி மையம் இல்லாததால்...சிரமம் மகளிர்குழு இலக்கை எட்டுவதில் இடையூறு
/
காஞ்சியில் திறன் பயிற்சி மையம் இல்லாததால்...சிரமம் மகளிர்குழு இலக்கை எட்டுவதில் இடையூறு
காஞ்சியில் திறன் பயிற்சி மையம் இல்லாததால்...சிரமம் மகளிர்குழு இலக்கை எட்டுவதில் இடையூறு
காஞ்சியில் திறன் பயிற்சி மையம் இல்லாததால்...சிரமம் மகளிர்குழு இலக்கை எட்டுவதில் இடையூறு
ADDED : ஏப் 29, 2025 10:03 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், திறன் சார்ந்த பயிற்சி மையம் இல்லாததால், மகளிர் குழுவினர் நீண்ட துாரம் சென்று பயிற்சி பெற தயக்கம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யப்படும் இலக்கு சிரமத்துடன் நிறைவேற்ற வேண்டி உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊரக உள்ளாட்சிகளில், 274 ஊராட்சிகள் உள்ளன.
காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்துார், மாங்காடு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நகராட்சிகள். உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகள் அடங்கிய நகர்புற உள்ளாட்சிகள் இயங்கி வருகின்றன.
இந்த ஊரக உள்ளாட்சிகள் மற்றும் நகர்புற உள்ளாட்சிகளில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் என, அழைக்கப்படும் மகளிர் திட்டத்தின் வாயிலாக, மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதுபோன்ற மகளிர் குழுவினருக்கு, சுய தொழில் துவங்க பொருளாதாரம், கறவை மாடு, சிறு வணிக ஆகிய கடனுதவி மற்றும் மொபைல் போன் பழுது நீக்குதல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்வதற்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தீன் தயாள் உபாத்யா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் இருக்கும் மகளிர் குழுவினருக்கு, வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில், 2021- -22ம் நிதி ஆண்டு முதல் ‛திறன் வளர்ப்பு' பயிற்சிகள் துவக்கப்பட்டன.
குறிப்பாக பட்டியல் இனத்தைச்சேர்ந்த பெண்களுக்கு, 50 சதவீதமும். சிறுபான்மை பிரிவு பெண்களுக்கு, 15 சதவீதமும். மாற்றுத்திறனுடைய பெண்களுக்கு 3 சதவீதம் என, பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையில் படித்த பெண்களுக்கு, ஆறு மாதங்கள் வரையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்படி, 2021-- 22ம் நிதி ஆண்டில் 377 நபர்கள், 2022-- 23ம் நிதி ஆண்டில், 195 நபர்கள், 2023-- 24ம் நிதி ஆண்டில் 173 நபர்கள், 2024- -25ம் நிதி ஆண்டில், 250 நபர்கள் என, மொத்தம் 995 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், 190 நபர்களுக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை என, துறை ரீதியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பயிற்சி மையம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. பயிற்சி பெற நினைக்கும் மகளிர் குழுவினர் சென்னைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, மகளிர் திட்ட அலுவலகத்தினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி மையத்தை ஏற்படுத்தி மகளிர் குழுவினருக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கத்திற்கு பழைய ஊரக வளர்ச்சி துறை கட்டடம் உள்ளது. இங்கு, பயிற்சி அளிக்கும் வகையில் இட வசதி உள்ளது. மேலும், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அமைக்க பல்நோக்கு மைய கட்டடம் உள்ளது. இங்கு, உள்ளாட்சி பிரதிதிகளுக்கு பயிற்சி நேரங்களை தவிர்த்து, பிற நாட்களில் மகளிர் குழுவினருக்கு பயிற்சி அளிக்கலாம்.

