/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலிமனைக்கு வரி வசூலிப்பதில் மெத்தனம்... வருவாய் இழப்பு!: ஊராட்சிகளுக்கு ரூ.பல லட்சம் 'அம்போ'
/
காலிமனைக்கு வரி வசூலிப்பதில் மெத்தனம்... வருவாய் இழப்பு!: ஊராட்சிகளுக்கு ரூ.பல லட்சம் 'அம்போ'
காலிமனைக்கு வரி வசூலிப்பதில் மெத்தனம்... வருவாய் இழப்பு!: ஊராட்சிகளுக்கு ரூ.பல லட்சம் 'அம்போ'
காலிமனைக்கு வரி வசூலிப்பதில் மெத்தனம்... வருவாய் இழப்பு!: ஊராட்சிகளுக்கு ரூ.பல லட்சம் 'அம்போ'
ADDED : ஜன 25, 2025 09:52 PM
காஞ்சிபுரம்:நகர்ப்புறங்களில் காலி மனைகளுக்கு வரி வசூலிப்பு நடைமுறைகள் உள்ளது போல், கிராம ஊராட்சிகளில் காலிமனை வரி விதிப்பு இல்லாததால், பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக, உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்புகின்றனர். தற்போதைய நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.65 லட்சம் வீட்டுமனைகள் காலியாக உள்ளன.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்கள் உள்ளன. இதில், டி.டி.சி.பி., என அழைக்கப்படும் நகர் ஊரமைப்பு இயக்கம், சி.எம்.டி.ஏ., என அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வாயிலாக, வீட்டுமனை பிரிவுகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளும் பல இடங்களில் உள்ளன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,210 நகர் ஊரமைப்பு இயக்க வீட்டுமனை பிரிவுகளும், 165 சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் வீட்டுமனை பிரிவுகளும், 834 அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பிரிவுகள் என, மொத்தம் 2,209 வீட்டுமனை பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொரு வீட்டுமனை பிரிவிற்கும், 40 வீட்டுமனைகள் முதல், 80 வீட்டுமனைகள் வரை இடம் பெறுகின்றன. இதில், வீடு கட்டுவோர் மட்டுமே, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களிடம் அனுமதி பெற்று, வீடுகளை கட்டி வருகின்றனர். பலர் காலி மனைகளாகவே வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.65 லட்சம் வீட்டுமனைகள் வீடு கட்டாமல் அப்படியே உள்ளன. இதில், பெரும்பாலான மனைகள் நகர்ப்புறம் ஒட்டிய பகுதிகளில் அதிகம் உள்ளன. அதிலும், நகரங்களை ஒட்டிய வீட்டுமனை பிரிவுகளில், மக்கள் வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.
வீடு கட்ட விரும்பாத பலரும் தங்களது மனைளை காலியாகவே வைத்துள்ளனர். இதுபோன்ற காலி வீட்டுமனை வைத்திருப்போரிடம், உள்ளாட்சி நிர்வாகங்கள் வரி வசூலிப்பதில்லை. இதனால், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்புகின்றனர்.
காலிமனை பிரிவுகளால் எந்தவித வருவாயும் கிடைக்காத நிலையில், அந்த வீட்டு மனைகளை பராமரிக்க வேண்டிய கூடுதல் பணிகள், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.
உதாரணமாக, பருவ மழைக்காலங்களில், காலி வீட்டுமனைகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டால், தண்ணீரை வெளியேற்ற அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் களத்தில் இறங்குகின்றன.
காலி வீட்டுமனைகளில் குப்பை சேராத வகையிலும், மழைநீர் தேங்காத வகையிலும் பராமரிக்க வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகங்கள் சலிப்புடன் இதுபோன்ற பணிகளை மேற்கொள்கிறது. இதை தவிர்க்க, ஊராட்சிகளில் இருக்கும் காலி வீட்டுமனை பிரிவுகளுக்கு, வரி விதிப்பு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி கூறியதாவது:
தமிழக அளவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் மட்டும் காலி வீட்டுமனைகளுக்கு வரி வசூலிப்பு செய்ய அனுமதி உள்ளது. ஊராட்சிகளில் காலி வீட்டுமனைகளுக்கு வரி விதிப்பு இல்லை. மாறாக, வீடு கட்டும் போது தான் வரி வசூலிப்பு செய்துக் கொள்ளலாம்.
அதுவும், ஊரக உள்ளாட்சிகளின் திட்ட குழுமம் நிர்ணயம் செய்தபடி வரி வசூலிப்பு செய்யலாம். ஊராட்சிகளில் போடப்பட்ட பெரும்பாலான வீட்டுமனை பிரிவுகளில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வீடுகள் கட்டி உள்ளனர்.
மீதமுள்ள இரு பங்கு வீட்டு மனைகள் காலியாகவே உள்ளன. ஊராட்சிகளில் காலி மனை வரி வசூலிப்பு செய்ய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.