/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.12 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் பராமரிப்பில்லாததால் ஒளிராத அவலம்
/
ரூ.12 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் பராமரிப்பில்லாததால் ஒளிராத அவலம்
ரூ.12 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் பராமரிப்பில்லாததால் ஒளிராத அவலம்
ரூ.12 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் பராமரிப்பில்லாததால் ஒளிராத அவலம்
ADDED : டிச 22, 2024 12:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள, 51 வார்டுகளில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட தெருக்களில் பயன்பாட்டில் இருந்த குழல் விளக்குகளை அகற்றிவிட்டு, புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மாநகராட்சி முழுதும் 12,000க்கும் அதிக எண்ணிக்கையில், புதிதாக எல்.இ.டி., விளக்குகள் கடந்தாண்டு பொருத்தும் பணிகள் துவங்கின.
தனியார் நிறுவனம் வாயிலாக விளக்குகள் பொருத்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. நகரின் முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள், தெருக்கள் என ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப, 100 வாட்ஸ்க்கு அதிகமாகவும், குறைவான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மின் கட்டணத்தை குறைக்கவே எல்.இ.டி.,விளக்குகள் பொருத்துவதாகவும், தமிழகம் முழுதும் நகர்ப்புறங்களில் இதுபோல் மாற்றியமைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த விளக்குகள் பொருத்தியதில் இருந்தே சரிவர பராமரிக்கப்படுவதில்லை என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
அதற்கு ஏற்றாற்போல், மாநகராட்சி முழுதும் எல்.இ.டி.,விளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரியாததால், பல இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.
காமராஜர் சாலை, மேற்கு ராஜவீதி, செங்கழுநீரோடை வீதி, கிருஷ்ணன் தெரு, டோல்கேட், விளக்கடி கோவில் தெரு என ஏராளமான இடங்களில், இந்த விளக்குகள் சரிவர எரிவதில்லை. மேயர் மகாலட்சுமியின், 9 வது வார்டிலேயே பல விளக்குகள் இரவில் எரிவதில்லை.
இந்த விளக்குகள் பொருத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்திருந்தனர். அவர்களின் புகாருக்கு ஏற்ப, மாநகராட்சி முழுதும் நுாற்றுக்கணக்கான விளக்குகள் இரவில் எரியாமல் இருப்பது தொடர் கதையாகியுள்ளது.