காஞ்சியில் 100க்கும் மேற்பட்ட சாலைகள் சின்னாபின்னம்! கிரேன் உதவியுடன் வாகனங்களை மீட்கும் அவலம்
காஞ்சியில் 100க்கும் மேற்பட்ட சாலைகள் சின்னாபின்னம்! கிரேன் உதவியுடன் வாகனங்களை மீட்கும் அவலம்
UPDATED : ஆக 18, 2026 06:33 AM
ADDED : ஆக 17, 2026 09:03 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் நடந்து வரும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகளால், 100க்கும் மேற்பட்ட சாலைகள் கடுமையாக சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளன. சாலை பள்ளங்களில் வாகனங்கள் சிக்கித் திணறுவது தொடர்கிறது. நேற்று சாலை பள்ளத்தில் சிக்கிய கார், கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களில், 51 வார்டுகள் உள்ளன. இதில், 40 வார்டுகளில், குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பாட்டில் உள்ளது.
இதனால், காஞ்சிபுரத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட, செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, திருக்காலிமேடு, தேனம்பாக்கம் போன்ற பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், உலக வங்கி நிதியுதவியுடன், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் சேதமடையும் சாலைகளை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.
திட்டம் செயல்படுத்தப்பட்ட, 43, 44, 45 போன்ற வார்டுகளில், சில சாலைகள் சீரமைக்கப்பட்டன. ஆனால், 46, 47, 48, 49 போன்ற வார்டுகளின் நுாற்றுக்கணக்கான சாலைகள், கடுமையாக சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் இச்சாலைகளில் மழைநீர் தேங்கி சகதியாக மாறுவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தினசரி கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்கள் கூட சில பகுதிகளில் செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளி மாணவ - மாணவியர், முதியவர்கள் தினசரி நடந்து செல்லவே முடியாத நிலை உருவாகி உள்ளது. வாடிக்கையாளர் வருகை குறைவால், வணிக நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
அண்ணாமலை நகரில் சேதமான சாலை பள்ளத்தில் கார் ஒன்று நேற்று சிக்கியது. இதையடுத்து, காரின் உரிமையாளர் கிரேன் ஒன்றை வரவழைத்தார். கயிறு கட்டி பள்ளத்தில் இருந்து, கார் மீட்கப்பட்டது.
குழாய் பதிக்கும் பணிகள் முடிந்ததும், உடனடியாக சாலை சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி, புதிய தார் அல்லது கான்கிரீட் சாலைகள் அமைக்க தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்திய, 44, 45 போன்ற வார்டுகளில் சில பகுதிகளில், சில மாதங்கள் முன்பாக புதிய சாலை அமைத்து கொடுத்தோம். அதன்பின், அரசிடம் நிதி வரும் என எதிர்பார்த்தோம்.
தொடர்ந்து சட்டசபை தேர்தல் வந்ததால், நிதி ஒதுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது, சாலை சீரமைப்புக்கு அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம். நிதி வந்தவுடன், சாலைகளை சீரமைத்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
