அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரி இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரி இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 28, 2026 05:49 AM

ஸ்ரீபெரும்புதுார் :வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், போக்குவரத்து விதிகளை மீறி, அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம், பாலுார் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், விதிகள் மீறப்பட்டு, டிப்பர் லாரிகளில், ஜல்லி, கருங்கல், எம்-. சாண்ட், லாரிகளில் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வது வழக்கமாகி வருகிறது. வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து வரும் டிப்பர் லாரிகள், வண்டலுார் -வாலாஜாபாத் சாலையில், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு செல்கின்றன. இதனால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, விதிகளை மீறி, அதிக பாரங்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் மீது, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
