/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதுரமங்கலம் எம்பார் கோவில் தேர் வெள்ளோட்டம் விமரிசை
/
மதுரமங்கலம் எம்பார் கோவில் தேர் வெள்ளோட்டம் விமரிசை
மதுரமங்கலம் எம்பார் கோவில் தேர் வெள்ளோட்டம் விமரிசை
மதுரமங்கலம் எம்பார் கோவில் தேர் வெள்ளோட்டம் விமரிசை
ADDED : ஜன 20, 2025 01:26 AM

மதுரமங்கலம்,:மதுரமங்கலம் கிராமத்தில், கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமிகள் கோவில் உள்ளது. சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் மற்றும் தை மாதம் எம்பார் அவதார தினம் ஆகிய நாட்களில் தேரோட்டம் நடைபெறும்.
கடந்த 1976ம் ஆண்டு கோவிலின் தேர் பழுதடைந்தது. ஹிந்து அறநிலைய துறை அமைச்சர். 2022 - 23 சட்டசபை மானிய கோரிக்கையில், பல்வேறு கோவில்களில் சேதம் ஏற்பட்டிருக்கும் தேர்கள் சீரமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, மதுரமங்கலம் எம்பார் கோவில் தேர், 55 லட்சம் ரூபாய் செலவில், உபயதாரர்களின் பங்களிப்புடன் தேர் சீரமைக்கப்பட்டது. மேலும், 19.40 லட்சம் ரூபாய் செலவில், தேருக்கு கொட்டகை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்த புதிய தேரின் வெள்ளோட்டம், நேற்று வெகுவிமரிசையாக மதுரமங்கலத்தில் நடந்தது. பல்வேறு பரிகார பூஜைகளுக்கு பின், தேர் வீதியுலா புறப்பட்டது. பக்தர்கள், 'கோவிந்தா... கோவிந்தா' என, கோஷம் எழுப்பி தேர் வெள்ளோட்டம் நடத்தினர்.
இதில், கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமிகள் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். ஹிந்து அறநிலைய துறை கோவில் செயல் அலுவலர் ராஜ இளம்பெருவழுதி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
கூரத்தாழ்வான் கோவில்
காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் கூரத்தாழ்வானின், 1,015வது திருவவதார மஹோத்ஸவம், கடந்த 11ம் தேதி திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது.
தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு ஸிம்மம், யாளி, மங்களகிரி, கமலாசன தொட்டி, சூரிய பிரபை, குதிரை, சந்திர பிரபை, யானை வாகனத்தில் கூரத்தாழ்வான் உலா வந்தார்.
இதில், ஒன்பதாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம், நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கூரத்தாழ்வான் எழுந்தருளினார்.
பல்வேறு பூஜைகளுக்கு பின், பக்தர்கள் தேரை வடம் பிடித்து, 'கோவிந்தா... கோவிந்தா' என, கோஷம் எழுப்பி இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.