ADDED : ஜூலை 07, 2025 01:12 AM

கிடங்கரை:கிடங்கரையில், சேதமடைந்த வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு, புது சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சியில் உள்ள கிடங்கரை கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள, சாலவாக்கம் செல்லும் சாலையோரத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு, 150 குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த ரேஷன் கடை கட்டடம், 25 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, இக்கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது.
மழை நேரங்களில் கட்டட கூரையில் மழைநீர் ஊறி, சொட்டுகிறது. அப்போது, கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் நனைந்து பாழாகின்றன.
இதனால், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட, ஊரக வளர்ச்சி துறையினருக்கு அப்பகுதி மக்கள், 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கிடங்கரை ரேஷன் கடைக்கு புதிய சொந்த கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.