ADDED : ஆக 19, 2025 12:29 AM

உத்திரமேரூர், ஆக. 19--
கருவேப்பம்பூண்டியில் காருக்கு வழிவிட கூறிய ஓட்டுநரை தாக்கிய வாலிபரை, உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அண்ணா சாலை பகுதியில் வசித்து வருபவர் சுமன், 27. இவர், உத்திரமேரூர் அடுத்த, ஒழுகரை கிராமத்தில் உள்ள, உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் காரில் நேற்று முன்தினம் வந்தார்.
பின், அப்பகுதியில் நடந்த திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, குடும்பத்தினருடன் ஒழுகரையில் இருந்து, நேற்று முன் தினம் மாலை 6:15 மணிக்கு, காரில் சென்னை நோக்கி சென்றார்.
அப்போது, கருவேப்பம்பூண்டி பகுதியில் கார் செல்லும்போது, சாலையில், 'டூரிஸ்ட்' வேன் நிறுத்தப்பட்டிருந்தது. காரை ஓட்டிவந்த சுமன் கீழே இறங்கி, வேனை ஓரமாக நிறுத்தி வழிவிடுமாறு கூறியுள்ளார்.
அப்போது, வேனில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், 34, என்பவர், கார் ஓட்டுநருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
பின், வேனில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுமனின் தலையில் பெருமாள் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த சுமனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சுமனின் உறவினர் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, பெருமாளை கைது செய்தனர்.

