/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவனை ஏமாற்றி ரூ.10,000 பறித்தவர் கைது
/
மாணவனை ஏமாற்றி ரூ.10,000 பறித்தவர் கைது
ADDED : அக் 27, 2025 11:45 PM

சென்னை: வங்கி ஊழியர் போல நடித்து, கல்லுாரி மாணவனிடம், 10,000 ரூபாயை பறித்துச் சென்றவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தி.நகர், தர்மாபுரம், 10வது தெருவைச் சேர்ந்தவர் சாய்பிரதேஷ், 18. தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி, அவரது தம்பியுடன் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி., வங்கி ஏ.டி.எம்., மையத்தில், 10,000 ரூபாய் எடுத்துள்ளார்.
அப்போது, தலைக்கவசம் அணிந்து வந்த நபர், சாய்பிரதேஷிடம் வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர் கையில் வைத்திருந்த, 10,000 ரூபாயை பெற்றுக்கொண்டு, 'வங்கிக்கு உள்ளே வாருங்கள்; பணத்தை தருகிறேன்' எனக்கூறி சென்றுள்ளார்.
வங்கிக்குள் சென்று பார்த்த மாணவன், பணத்தை வாங்கிச் சென்றவர் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், மாதவரத்தைச் சேர்ந்த ரமேஷ், 55, என்பவர் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 10,000 ரூபாயை மீட்டனர்.

