/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரத்து குறைந்ததால் சாமந்தி பூ கிலோ ரூ.320
/
வரத்து குறைந்ததால் சாமந்தி பூ கிலோ ரூ.320
ADDED : ஏப் 15, 2025 12:56 AM

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் விளையும் சாமந்தி பூ, காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரத்தில், கடந்த வாரம் கிலோ சாமந்தி பூ, 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தமிழ் புத்தாண்டு பண்டிகையையொட்டி சாமந்தி பூவின் தேவை அதிகரித்ததால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு, இரு நாட்களாக சாமந்தி பூ வரத்து குறைந்துவிட்டது.
இதனால், கடந்த வாரம் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்தி பூ, 120 ரூபாய் விலை உயர்ந்து, இரு நாட்களாக கிலோ சாமந்தி 320 ரூபாயக்கு விற்கப்பட்டது.
மல்லி விலை சரிவு
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சாமந்திபுரம், கூரம், வதியூர், தக்கோலம், சிறுவாக்கம், புரிசை, புள்ளலுார், மூலப்பட்டு, மணியாச்சி, உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
நேற்று முன்தினம், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் கிலோ மல்லிகைப்பூ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, 170 ரூபாய் குறைந்து, கிலோ, 230 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மல்லிகைப்பூவின் தேவையைவிட, விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகரித்ததால், மல்லிகை விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.