ADDED : நவ 17, 2026 08:39 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து, மார்க்., கம்யூ., கட்சி சார்பில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே இன்று (நவ.,17) ஆர்ப்பாட்டம் நடந்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்., கம்யூ., கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாநகரக் குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகரச் செயலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்டச் செயலர் நேரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். சாலை, குடிநீர், தெருவிளக்கு, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், பூங்காக்களை மேம்படுத்த வேண்டும், மாநகராட்சியில் கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
