/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை திரும்புவோர் அதிகரிப்பு சென்ட்ரல், கோயம்பேடில் கூட்டம்
/
சென்னை திரும்புவோர் அதிகரிப்பு சென்ட்ரல், கோயம்பேடில் கூட்டம்
சென்னை திரும்புவோர் அதிகரிப்பு சென்ட்ரல், கோயம்பேடில் கூட்டம்
சென்னை திரும்புவோர் அதிகரிப்பு சென்ட்ரல், கோயம்பேடில் கூட்டம்
ADDED : ஜன 18, 2024 12:54 AM

சென்னை:பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று ஏராளமானோர் சென்னை திரும்பினர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
வெளியூர் சென்றவர்கள், நேற்று முதல் சென்னை திரும்ப துவங்கினர். இதனால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் நேற்று அதிகாலை முதல் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏற்கனவே அறிவித்தபடி, விரைவு போக்குவரத்து கழக விரைவு சொகுசு பேருந்துகள், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டன.
மற்ற அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேடுக்கு இயக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பியதால் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார், தாம்பரம் பகுதியில் நேற்று அதிகாலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து மெதுவாக சென்றன. இன்று நள்ளிரவு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பயணியரின் தேவைக்கு ஏற்ப வெளியூர்களில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளோடு, கூடுதலாக 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
'இன்று நள்ளிரவு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்' என்றனர்.