/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைவிடப்பட்ட 10 குவாரிகளை சுற்றி வேலி அமைக்க...திட்டம்: நீர் மாசுபடுவதை தடுக்க கனிம வள துறையினர் முடிவு
/
கைவிடப்பட்ட 10 குவாரிகளை சுற்றி வேலி அமைக்க...திட்டம்: நீர் மாசுபடுவதை தடுக்க கனிம வள துறையினர் முடிவு
கைவிடப்பட்ட 10 குவாரிகளை சுற்றி வேலி அமைக்க...திட்டம்: நீர் மாசுபடுவதை தடுக்க கனிம வள துறையினர் முடிவு
கைவிடப்பட்ட 10 குவாரிகளை சுற்றி வேலி அமைக்க...திட்டம்: நீர் மாசுபடுவதை தடுக்க கனிம வள துறையினர் முடிவு
ADDED : மார் 05, 2025 07:24 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கைவிடப்பட்ட 10 கல் குவாரி பள்ளங்களை சுற்றிலும் வேலி அமைத்து, தண்ணீர் மாசு ஏற்படுவதை தடுக்க, கனிம வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய தாலுகாக்களில், சங்கராபுரம், ஆற்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல், பினாயூர், கரணை உள்ளிட்ட 25 கிராமங்களில், 55க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. இங்க, பூமிக்கடியில் இருந்து பாறைகளை வெடிவைத்து உடைத்து எடுக்கப்படுகிறது.
இதில் கிடைக்கும் வருவாயில், குவாரி குத்தகை எடுத்த உரிமையாளர்கள், 40 சதவீத கட்டணத்தை, மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும்.
குவாரிகளின் வாயிலாக கிடைக்கும் வருவாயில், சுரங்கம் மற்றும் குவாரிகளால் பாதிக்கப்படும் இடங்களில், அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினருக்கு, குடிநீர், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தை நலன், வயது வந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், திறன் மேம்பாடு ஆகிய வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படுகிறது.
ஒரு சில குவாரிகளில், அளவுக்கு அதிகமான ஆழத்தில் பாறை கற்களை வெட்டி எடுத்து, மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு கைவிடப்பட்ட குவாரிகள் உள்ளன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 குவாரிகள் உள்ளன. இது போன்ற குவாரிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மற்றும் குளிக்க செல்லும் மனிதர்களால் உயிர் பலி ஏற்படுகின்றன.
இதுவரையில், ஐந்து மனிதர்கள், 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் என, உயிர் பலி ஏற்பட்டுள்ளன. இதுதவிர, தனியார் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குப்பை கொட்டி நாசப்படுத்தி வருகின்றனர்.
உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், சீக்கராயபுரம் கல் குவாரியில் தேங்கி இருக்கும் நீர் தேக்கத்தில், கொல்லஞ்சேரி ஊராட்சி கழிவுகள் கொட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல, வாலாஜாபாத் அடுத்த, குண்ணவாக்கம் குவாரியில் தடுப்பு இன்றி குப்பை கொட்டுவதால் நீர் மாசு ஏற்படுவதோடு, விபத்துகள் நடக்கும் அபாயமும் உள்ளது.
இதனால், கல் குவாரி பள்ளங்களில் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதோடு, தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கனிம வளத்துறை வேலி அமைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பயன்பாடு அகற்ற நிலையில் இருக்கும் 15 குவாரிகளில், வேலி அமைக்கப்பட உள்ளது.
இந்த வேலி அமைக்கும் வாயிலாக, உயிர் பலிகள் மற்றும் தண்ணீர் மாசு ஏற்படுவதை முற்றிலும் தடுக்க முடியும் என, கனிம வளத் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கைவிடப்பட்ட அரசு மற்றும் தனியார் குவாரிகளை சுற்றிலும், தடுப்பு வேலி அமைக்கப்பட உள்ளன. இதற்குரிய திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசிற்கு அனுப்பியுள்ளோம். ஒப்புதல் கிடைத்த பின், கனிம வள நிதியின் கீழ் பாதுகாப்பு ஏற்படு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதற்கட்டமாக, 10 குவாரிகளை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்படும். இத்திட்டம் வெற்றி பெற்றால், மீதம் இருக்கும் ஐந்து குவாரிகளிலும் வேலி அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.