/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் -- ஒரகடம் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகள் திணறல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை வருமா?
/
வாலாஜாபாத் -- ஒரகடம் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகள் திணறல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை வருமா?
வாலாஜாபாத் -- ஒரகடம் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகள் திணறல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை வருமா?
வாலாஜாபாத் -- ஒரகடம் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகள் திணறல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை வருமா?
ADDED : ஏப் 28, 2025 01:30 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் பேரூராட்சி உள்ளது. வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், வாலாஜாபாத் வந்து, அங்கிருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதில், ஒரகடம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் மற்றும் அச்சாலை வழி தடத்திலான கிராமங்களுக்கு செல்வோர், வாலாஜாபாத் ரயில்வே பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.
வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே, காவல் நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நுாலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், தபால் நிலையம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவை செயல்படுகின்றன.
வாலாஜாபாத் ரயில்வே பாலம் சாலை வழியாக, காலை மற்றும் மாலை நேரங்களில், சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் பேருந்துகள், கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள், அலுவலகங்களுக்கு செல்வோர் என, ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
அச்சமயம், வாலாஜாபாத் பேருந்து நிலையம் துவங்கி, ரயில்வே பாலம் அடுத்த மெக்ளின்புரம் பேருந்து நிறுத்தம் வரையிலான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அப்போது, ரயில்வே பாலம் வழி சாலையை விரைந்து கடக்க முடியாமல் தினமும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனால், வாலாஜாபாத் ரயில்வே பாலம் அடுத்த, மெக்ளின்புரம் ஐ.டி., தொழிற்கூடம் அருகே சிக்னல் அமைத்து போக்குவரத்து நெரிசல் குறைக்க வேண்டும். அல்லது, வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
ரயில்வே பாலம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாயிலாக போக்குவரத்து ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

