/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தார் சாலை போடாததால் வாகன ஓட்டிகள் சிரமம்
/
தார் சாலை போடாததால் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : செப் 10, 2025 03:18 AM

காஞ்சிபுரம்:சிறுவாக்கம் - சாமந்திபுரம் இடையே செல்லும் சாலை தரைப்பாலத்தில், தார் சாலை போடாதது வாகன ஓட்டிகள் இடையே சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில் இருந்து, வரதாபுரம் கிராமம் வழியாக சாமந்திபுரம் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.
இந்த சாலை, பிரதமர் சாலைகள் மேம்பாட்டு நிதியில், 2.36 கோடி ரூபாய் செலவில், புதிய தார் சாலை போடும் பணி, கடந்த ஆண்டு துவங்கி, ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்றுள்ளது.
இருப்பினும், சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சிறுவாக்கம் - வரதாபுரம் செல்லும் தரைப்பாலத்தின் உள்ளே தார் சாலை போடும் பணியை ஒப்பந்தம் எடுத்தவர் நிறைவு செய்யவில்லை.
இதனால், தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி, சகதி அதிகமாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவிரைவு சாலைக்கு கொட்டிய மண் மேட்டின் மீது ஆபத்தாக செல்ல வேண்டி உள்ளது.
எனவே, சிறுவாக்கம் - வரதாபுரம் இடையே செல்லும் தரைப்பாலத்தில் தேங்கி இருக்கும் மண்ணை அகற்றிவிட்டு, தடையின்றி வாகனங்கள் செல்ல தார் சாலை அமைத்து வழி வகை ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.