அடுக்கு வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படும்: காஞ்சி த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார்
அடுக்கு வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படும்: காஞ்சி த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார்
ADDED : ஏப் 14, 2026 06:19 PM

காஞ்சிபுரம்:''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அடுக்கு வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படும்,'' என, காஞ்சிபுரம் த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார், வாக்குறுதி அளித்து, பொது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி த.வெ.க., வேட்பாளர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் நேற்று காந்தி ரோடு பகுதியில், பிரசாரம் துவக்கினார். த.வெ.க., கட்சி நிர்வாகிகள் பிரமாண்டமான ரோஜா பூ மாலை அணிவித்து, வேட்பாளரை வரவேற்றனர்.
குதிரைகள் பூட்டிய சரட் வாகனத்தில் சென்றார். காந்தி ரோடு காமராஜர் சிலை, ரயில்வே சாலை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில், காய்கறி விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
இந்த பிரசாரத்தின் போது, த.வெ.க., தேர்தல் அறிக்கை குறித்து எடுத்துரைத்தார். மேலும், மார்க்கெட் பகுதியில், ரஞ்சித்குமார் பேசியதாவது:
தமிழகத்தில், ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பதற்கு, விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள். நான் வெற்றி பெற்றால், காஞ்சிபுரம் கோவில்கள், மார்க்கெட் உள்ளிட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், அடுக்கு வாகனம் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம் தொகுதி மக்களுக்கு நல்ல காப்பாளனாக இருப்பேன். மார்க்கெட் பகுதியில் வழிந்தோடும் கழிவுநீரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
