/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மழைநீர் கால்வாயை மறித்து வணிக கட்டடம்... அட்டூழியம்!ஆக்கிரமிப்புக்கு துணை போன மாநகராட்சி, மின்வாரியம்

ADDED : நவ 09, 2024 12:05 AM
காஞ்சிபுரம்:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்க கூடாது எனவும், அவற்றை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் வாயிலாக, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஏராளமான நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், நகரின் மையத்தில் உள்ள மேட்டுத் தெருவை கடந்து செல்லும் மஞ்சள்நீர் கால்வாயின் கிளை கால்வாயை மறித்து, புதிதாக பிரமாண்ட கட்டடத்தை தனிநபர் கட்டியுள்ளார்.
கால்வாயை மறித்து கட்டி வந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் பற்றி மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்த பின்னும், கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்டுமான பணிகளை முடித்து, வணிக ரீதியில் கடை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள இந்த புதிய கட்டடத்திற்கு, மின்வாரிய அதிகாரிகள் புதிதாக மின் இணைப்பு வழங்கியிருப்பது, அப்பகுதியினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எந்தவித மின் இணைப்பும் வழங்கக் கூடாது என, தமிழக மின்வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், நீர்நிலைகளுக்கு மின் இணைப்பு வழங்குவது அதிகரித்துள்ளது. மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து புதிதாக கட்டடம் கட்டியிருப்பதால், வெள்ளத்தின்போது, மழைநீர் வெளியேற முடியாமல், மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
புதிய கட்டடத்தின் கட்டுமான கழிவுகளை, மழைநீர் கால்வாயில் கொட்டி, மழைநீர் செல்ல முடியாமல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு துணை போயிருப்பதாக, மேட்டுத் தெருவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.