/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தகரம் அம்மன் கோவிலில் தேரை எரிக்க மர்ம நபர்கள் முயற்சி; பக்தர்கள் கொதிப்பு
/
புத்தகரம் அம்மன் கோவிலில் தேரை எரிக்க மர்ம நபர்கள் முயற்சி; பக்தர்கள் கொதிப்பு
புத்தகரம் அம்மன் கோவிலில் தேரை எரிக்க மர்ம நபர்கள் முயற்சி; பக்தர்கள் கொதிப்பு
புத்தகரம் அம்மன் கோவிலில் தேரை எரிக்க மர்ம நபர்கள் முயற்சி; பக்தர்கள் கொதிப்பு
ADDED : செப் 08, 2025 01:04 AM

வாலாஜாபாத்:புத்தகரம் முத்து கொளக்கியம்மன் கோவிலுக்கென புதிதாக செய்யப்பட்ட தேரில் பெட்ரோல் ஊற்றி, மர்ம நபர்கள் தீயிட்டது பக்தர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேரத்தில் மழை பெய்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.'தீயில் தேருக்கு எந்த பாதிப்பும் இல்லை; சுற்றி மூடியிருந்த தார்பாலின் மட்டும் எரிந்தது' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் சேதமடைந்ததால், 40 ஆண்டுகளாக தேரோட்டம் நடப்பதில்லை.
அதிகாரிகள் ஆய்வு
இதனால், பொதுநல நிதியின் கீழ், 28.40 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் செய்யும் பணி, கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது. தேர் திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து, இம்மாதம் 5ம் தேதி வெள்ளோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
வெள்ளோட்டத்தின்போது தங்கள் பகுதி தெருவிலும் தேர் உலா வர வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், கோரிக்கை வைத்தனர். அதற்கு, மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புத்தகரத்தில் அனைத்து தெருக்களிலும் தேர் உலா வர உத்தரவிடக்கூறி, அப்பகுதியைச் சேர்ந்த வி.சி., கட்சி பொறுப்பாளர் செல்வராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புத்தகரத்தில் தேர் செல்ல பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய தேரோட்ட வீதிகள் உள்ளனவா என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
அதுவரை தேர் வெள்ளோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிலுக்கென புதிதாக செய்யப்பட்ட தேரை, நேற்று முன்தினம் இரவு தீயிட்டு எரிக்க, மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். தேரைச் சுற்றி மூடியிருந்த தார்பாலின் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுள்ளனர். அந்த சமயத்தில் மழை பெய்ததால், தார்பாலின் ஒரு பகுதி மட்டும் எரிந்தது; தேருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஹிந்து அறநிலையத் துறை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ஹிந்து முன்னனி மாவட்ட துணை தலைவர் ராஜா உள்ளிட்டோரும் இருந்தனர்.
சந்தேகம்
இதற்கிடையே வி.சி., கட்சி நிர்வாகி செல்வராஜ், காஞ்சிபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில், 'புத்தகரம் அம்மன் கோவில் தேர், ஆதிதிராவிடர் பகுதியில் வரக்கூடாது என்ற எண்ணத்தோடு எரிக்க முயற்சி நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டோரை கண்டறிந்து, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, புத்தகரம் கொளக்கியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ்குமார், வாலாஜாபாத் காவல் நிலைய போலீசாரிடம் அளித்த புகாரில், 'தேர் சம்பந்தமாக, செல்வராஜ் என்பவர், ஆரம்பம் முதலே பிரச்னை செய்து வருகிறார்.
'தேர் எரித்ததில் செல்வராஜ் மீது சந்தேகம் உள்ளதால், அவரை விசாரிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
புகார் தரப்பட்டுள்ளது
தார்பாலினால், தேர் மூடி வைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் தீயிட்டதில், தார் பாலின் மட்டுமே கருகியுள்ளது. தேருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இச்சம்பவம் குறித்து, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், வெள்ளோட்டம் போன்றவை குறித்து எதுவும் தற்போது கூற இயலாது. - அறநிலையத் துறை அதிகாரி, காஞ்சிபுரம்.