/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம்
/
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம்
ADDED : மார் 19, 2024 03:40 AM

காஞ்சிபுரம், : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைச்செல்வி உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும், சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களே இரவோடு இரவாக அகற்றியுள்ளனர்.
இருப்பினும், கிராமங்களில் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளன.
குறிப்பாக, வெள்ளைகேட், பொன்னேரிக்கரை, ஏனாத்துார் ஆகிய மேம்பாலங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை.
மேலும், மேம்பாலங்களின் பில்லர்களில் சுவரொட்டிகளை அரைகுறையாக அகற்றியுள்ளனர். இதுதவிர, கட்சி கொடி கம்பங்களும் அகற்றவில்லை.
செய்தி மக்கள் தொடர்பு துறையின், விளம்பர வாகனத்தில் இருந்த கட்சி தலைவர்கள் படம், பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டன.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்டலம், செட்டிபேடு, மண்ணுார், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தாமல் உள்ள சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதில் நெடுஞ்சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க்குகள், சாலையோர விளம்பர பதாகைகள், கொடிக்கம்பங்கள், ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மற்றும் பயணியர் நிழற்குடைகள், தமிழக முதல்வர் படத்தோடு வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மறைக்கப்படாமல் உள்ளன.
எனவே, மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வருவாய் துறையினர் கூறுகையில், ஊரக உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரைவில், சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்படும்'என்றார்.

