/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டிற்கு வந்தது புதிய மின்மாற்றி
/
பயன்பாட்டிற்கு வந்தது புதிய மின்மாற்றி
ADDED : ஜூன் 21, 2025 10:13 PM
சாத்தணஞ்சேரி,:சாத்தணஞ்சேரியில் புதிய மின்மாற்றி அமைத்து இணைப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி குறைந்த மின் அழுத்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில், ஓராண்டாக குறைந்த மின் அழுத்தம் பிரச்னை இருந்தது. இதனால், இரவு நேரங்களில் வீடுகளில் டியூப்லைட் ஒளிர்வதில் சிக்கல் ஏற்பட்டதோடு, மின்விசிறிகள், 'டிவி' உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாகி வந்தன.
இந்த குறைந்த மின்னழுத்த பிரச்னையை போக்கி, சீராக மின் வினியோகம் செய்ய அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, சாத்தணஞ்சேரி பெரியத் தெரு மற்றும் பாலன் நகர் ஆகிய பகுதிகளில், 25 கே.வி.ஏ., திறன் கொண்ட புதிய மின்மாற்றிகள் கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டது.
எனினும், புதிய மின்மாற்றிக்கு மின் இணைப்பு வழங்க தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், சாத்தணஞ்சேரியில், குறைந்த மின்னழுத்த பிரச்னை தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த 8ம் தேதி செய்தி வெளியானதையடுத்து, திருமுக்கூடல் மின் பகிர்மான கழகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சாத்தணஞ்சேரியில் புதிய மின்மாற்றிக்கு இணைப்பு வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக, அப்பகுதிக்கு மின் வினியோகம் துவங்கப்பட்டு குறைந்த மின்னழுத்தம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.