/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தாண்டு கோலாகலம்: கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
புத்தாண்டு கோலாகலம்: கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
புத்தாண்டு கோலாகலம்: கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
புத்தாண்டு கோலாகலம்: கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : ஜன 02, 2026 05:24 AM

காஞ்சிபுரம்: ஆங்கில புத்தாண்டையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சந்தனகாப்பு அலங்காரம் சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள திருக்கச்சியம்பதி விநாயகர் புத்தாண்டையொட்டி, சந்தனகாப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பழ அலங்காரம் காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் உள்ள கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஆப்பிள், கொய்யா, செவ்வாழை, சாத்துக்குடி, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது .
விருட்ச விநாயகர் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், விருட்ச விநாயகர் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், தேவகுரு, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சனீஸ்வர பகவான், ராகு கேது 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தீபம் ஏற்றி வழிபாடு காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை தெற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவிலுக்குள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்யாத பக்தர்கள் கிழக்கு ராஜ கோபுரம் நுழைவாயிலில் தீபம் ஏற்றி வழிபட்டனர்
பக்தர்களிடம் வாக்குவாதம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், மதியம் 1:00 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை, கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பக்தர்களுக்கும், அறங்காவலர் ஜெகன்நாதன், பணியில் இருந்த ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில், நாள் முழுதும் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். மூலவர் சன்னிதியை மூடினாலும், கோவிலில் உள்ள பிற சன்னதிகளை தரிசனம் செய்யவும், ஆயிரங்கால் மண்டபத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தினர்.
கண்ணாடி அறையில் வரதராஜர் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்யயன உத்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்சவர் வரதராஜ பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுடெல்லியை சேர்ந்த இஸ்கான்' என அழைக்கப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க குழுவினர், பஜனை பாடல்களை பாடி நடனமாடினர்.
வெள்ளி கவச அலங்காரம் காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம், மஹாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிததார்.
ராஜகுபேரர் கோவில் சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள குபேரபட்டினம் ராஜகுபேரர் கோவிலில் நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் மூலவர் ராஜகுபேரரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் செய்திருந்தார்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி, கைலாசநாதர் கோவில், உலகளந்த பெருமாள், வைகுண்ட பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வீரசன மலர் அலங்காரத்தில்
வல்லக்கோட்டை முருகன்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி, வீராசன மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார்.
இக்கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து, மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, முத்தங்கி சாற்றப்ட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் முருகப்பெருமான் வீராசன மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பல ஆயிரக்கணக்காக பக்தர்கள் வரிசையில் வந்து, அரோகரா அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர். கோவில் நிர்வகம் சார்பில் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், பாயாசம் உள்ளிட்டவை வழக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர். 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

