/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுாதனம்: குப்பை கிடங்கை மணல் போட்டு மூடும் மாநகராட்சி : அடாவடி செயலை வேடிக்கை பார்க்கும் வாரியம்
/
நுாதனம்: குப்பை கிடங்கை மணல் போட்டு மூடும் மாநகராட்சி : அடாவடி செயலை வேடிக்கை பார்க்கும் வாரியம்
நுாதனம்: குப்பை கிடங்கை மணல் போட்டு மூடும் மாநகராட்சி : அடாவடி செயலை வேடிக்கை பார்க்கும் வாரியம்
நுாதனம்: குப்பை கிடங்கை மணல் போட்டு மூடும் மாநகராட்சி : அடாவடி செயலை வேடிக்கை பார்க்கும் வாரியம்
ADDED : ஆக 13, 2025 01:46 AM

காஞ்சிபுரம்: குப்பை கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை, மணல் போட்டு மூடி மறைக்கும் நுாதன முயற்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இந்த அடாவடி செயலை தடுக்க வேண்டிய தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வேடிக்கை பார்த்து வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை, கட்டட கழிவுகள், நத்தப்பேட்டை திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இங்கு குவியும் குப்பையால் சுகாதார பிரச்னை பெரிதாகியுள்ளது.
கடந்த 2022ல், இந்த கிடங்கில் பல ஏக்கரில் குவிந்த குப்பை எரிக்கப்பட்டு, அதிலிருந்து வெளியான புகையால், அப்பகுதி மக்கள் சுவாச பிரச்னையில் திணறினர்.
இதையடுத்து, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சிக்கு, 94 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
அதிர்ச்சி ஒப்பந்த நிறுவனம் குப்பையை சரியாக தரம் பிரிக்காமல், அப்படியே கிடங்கில் கொட்டுவதாக, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
தனியார் திருமண மண்டபங்கள், உணவகங்களில் தனியாரால் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மாநகராட்சி கிடங்கில் தரம் பிரிக்காமல் கொட்டப்படுவதாக பிரச்னை எழுந்தது.
மேலும், ஆறு மாதங்களில் இந்த குப்பை கிடங்கு பல முறை எரிந்தது. மாநகராட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு பல வகையிலான பிரச்னைகள், குப்பை கிடங்கில் நடந்தபடியே உள்ளன. இவ்வாறான சூழலில், சில நாட்களாக, குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள ஏக்கர் கணக்கிலான குப்பை கழிவுகளை மணல் போட்டு, மாநகராட்சி மூடி வருவது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரச்னை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 68 கோடி ரூபாய் மதிப்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், குப்பை கிடங்கு அருகே கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு எடுக்கப்படும் மணல், அருகில் உள்ள குப்பை கிடங்கில், குப்பை கழிவுகள் மீது பொக்லைன் வாயிலாக பரப்பப்பட்டு, மூடப்பட்டு வருகிறது.
மணல் போட்டு மூடப்படுவதால் பிளாஸ்டிக் கழிவுகள் எதுவும் மட்காமல், அப்பகுதியின் மண் வளம், நிலத்தடி நீர் என, அனைத்தும் நாசமாகும் என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை அப்படியே மண் போட்டு மூடினால், நிலம், சுற்றுச்சூழல், குடிநீர் போன்றவை கடுமையாக பாதிக்கும் என, மாநகராட்சி பொறியாளர்களுக்கு நன்கு தெரியும்.
இருந்தும், ஏக்கர் கணக்கிலான குப்பையை மணல் போட்டு மூடும் அடாவடி செயலை மாநகராட்சி செய்கிறது. இது, சரியான நடைமுறை அல்ல. இதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் வேடிக்கை பார்த்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே, மாநகராட்சியின் கழிவுநீர், நத்தப்பேட்டை ஏரியில் கலப்பதாக பிரச்னை எழுந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதை ஆய்வு செய்தது.
பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்னையை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்த நிலையில், கழிவுநீரை சுத்திகரித்து விடுவதாக, முந்தைய மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் தெரிவித்தார்.
இப்போது குப்பை கிடங்கின் ஒரு பகுதியை மணல் போட்டு நிரப்பும் செயல், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி பொறியாளர் கணேசனிடம் கேட்டபோது, ''மஞ்சள் நீர் ஓடையில் இருந்து எடுக்கப்படும் மணல், குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. ஆனால், குப்பை மீது கொட்ட சொல்லவில்லை.
''அதன் அருகே தான் கொட்ட சொல்லி இருக்கிறோம்,'' என்றார்.
இதுதுகுறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ' எங்கள் உதவி பொறியாளரை அனுப்பி மாநகராட்சி கிடங்கு ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.