/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுாருக்கு ...பாலம்!:37 கி.மீ.,. சுற்றி செல்லும் 20 கிராமத்தினருக்கு தீர்வு
/
நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுாருக்கு ...பாலம்!:37 கி.மீ.,. சுற்றி செல்லும் 20 கிராமத்தினருக்கு தீர்வு
நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுாருக்கு ...பாலம்!:37 கி.மீ.,. சுற்றி செல்லும் 20 கிராமத்தினருக்கு தீர்வு
நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுாருக்கு ...பாலம்!:37 கி.மீ.,. சுற்றி செல்லும் 20 கிராமத்தினருக்கு தீர்வு
ADDED : நவ 10, 2024 12:59 AM

காஞ்சிபுரம்:நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுார் செய்யாற்றின் குறுக்கே, பாலம் கட்டுமான பணிக்கு டெண்டர் விட்டு, 12 மாதங்களில் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதனால், 20 கிராமத்தினர், 37 கி.மீ., சுற்றி செல்லும் அவலத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக் கோட்டங்கள் உள்ளடக்கிய, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும், காஞ்சிபுரம் கலெக்ரேட் பின்புற பகுதியில் இயங்கி வரும், நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில், 1,122 கி.மீ., துார சாலைகள் மட்டுமே உள்ளன.
கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகளில், வாகன பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நெரிசலை குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், 56.45 கோடி ரூபாய் மதிப்பில், 55 கி.மீ., துாரத்திற்கு, 25 சாலைகள் போடப்பட உள்ளன.
அதை தொடர்ந்து, இளையனார்வேலுார் - நெய்யாடுபாக்கம் இடையே, செய்யாற்றின் குறுக்கே, 30 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் கட்டுவதற்கு, நெடுஞ்சாலைத் துறை சமீபத்தில் அனுமதி அளித்து உள்ளது.
இந்த பாலம் கட்டுவதன் வாயிலாக காவாம்பயிர், இருமரம், மலையாங்குளம், நெய்யாடுபாக்கம், புல்லம்பாக்கம், புல்லம்பாக்கம், காட்டாங்குளம்,அமராவதிபட்டிணம், நரியம்பாக்கம், புலிவாய், கன்னிகுளம், புத்தெளி, பாண்டவாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 37 கி.மீ., துாரம் காஞ்சிபுரத்தை சுற்றிக் கொண்டு, வாலாஜாபாத் வழியாக, ஒரகடம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்காது.
நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுார் இடையே, அமைய இருக்கும் பாலத்தை கடந்தால் போதும், 20 கி.மீ., துாரத்தில் வாலாஜாபாத் பகுதிக்கு சென்று விடலாம். அங்கிருந்து, ஒரகடம், தாம்பரம், சென்னைக்கு எளிதாக சென்று விடலாம். இதன் வாயிலாக, நேரம் மிச்சப்படுத்த முடியும், அலைச்சலும் மிஞ்சும் என, கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இளையனார்வேலுார் - நெய்யாடுபாக்கம் இடையே, 30 கோடி ரூபாய் செலவில், 300 மீட்டர் நீளம் மற்றும் 7.5 மீட்டர் அகலத்தின் கூடிய பாலம் அமைய உள்ளது.
இந்த பாலத்தின் மீது, இருவழிச் சாலை மற்றும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு ஏற்ப, இருபுறமும் பாதை வழி ஏற்படுத்தி வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பாலம் கட்டுமான பணிக்கு, இன்னமும் டெண்டர் விடவில்லை. டெண்டர் விடப்பட்ட பின், 12 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த மேம்பாலத்தின் மூலமாக, 20 மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வாலாஜாபாத் வழியாக சென்னைக்கு எளிதாக சென்று வர வழி வகை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விமோசனம்!
இளையனார்வேலுார், வள்ளிமேடு, காவாந்தண்டலம், நெய்யாடுபாக்கம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ - -மாணவியர் உயர் கல்வி படிக்க காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
கிராமப்புறங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ- - மாணவியர் செய்யாற்றை கடந்து நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
வட கிழக்கு பருவ மழை காலத்தில், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. இளையனார் வேலுார் பகுதியில், தனியார் திருமண மண்டபத்தில் வகுப்பறை நடத்த வேண்டி உள்ளது.
இளையனார்வேலுார்- - நெய்யாடுபாக்கம் இடையே மேம்பாலம் அமைந்தால் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும்.
- -எஸ். ஜம்புலிங்கம்,
வள்ளிமேடு,
இளையனார்வேலுார்.
புதிய பாலத்தின் விபரம்
நீளம் 300 மீட்டர்
அகலம் 7.5 மீட்டர்
உயரம் 7.5 மீட்டர்
பில்லர்கள் 12
ஒவ்வொரு பில்லருக்கும் இடையே 25 மீட்டர் இடைவெளி