/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெளியூர் பேருந்துகள் எதுவும் இனி கோயம்பேடு செல்லாது இன்று முதல்!; கிளாம்பாக்கத்திற்கு 710, மாதவரத்திற்கு 160 பஸ்கள் மாற்றம்
/
வெளியூர் பேருந்துகள் எதுவும் இனி கோயம்பேடு செல்லாது இன்று முதல்!; கிளாம்பாக்கத்திற்கு 710, மாதவரத்திற்கு 160 பஸ்கள் மாற்றம்
வெளியூர் பேருந்துகள் எதுவும் இனி கோயம்பேடு செல்லாது இன்று முதல்!; கிளாம்பாக்கத்திற்கு 710, மாதவரத்திற்கு 160 பஸ்கள் மாற்றம்
வெளியூர் பேருந்துகள் எதுவும் இனி கோயம்பேடு செல்லாது இன்று முதல்!; கிளாம்பாக்கத்திற்கு 710, மாதவரத்திற்கு 160 பஸ்கள் மாற்றம்
ADDED : ஜன 30, 2024 03:51 AM
சென்னை : ''சென்னை கோயம்பேடில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்தும், 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இன்று முதல் இயக்கப்படும். வெளியூர் பேருந்துகள் இனி, கோயம்பேடு செல்லாது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் 393.71 கோடி ரூபாயில், 88 ஏக்கரில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு, கடந்த டிச., 30ல் திறக்கப்பட்டது.
இணைப்பு பேருந்து
அதை தொடர்ந்து, ஜன., 24 முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறந்ததில் இருந்தே, அங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, இணைப்பு பேருந்து போதுமான அளவில் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, பயணியரின் புகாருக்கு தீர்வு காணும் வகையில், போக்குவரத்து கழகங்களும், சி.எம்.டி.ஏ.,வும், பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கோயம்பேடில் இருந்து செல்லும் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்து கழக பேருந்துகளை இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதனால், தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று வெளியிட்ட அறிக்கை:
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று முதல் அனைத்து வகை போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள், இன்று முதல் இயக்கப்படாது.
அதாவது, செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 710 பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
தாம்பரம் வரை
மாதவரத்தில் இருந்து சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், புதுச்சேரி, போளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலுார் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.
எனவே, இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து 80 சதவீத பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகளும் இயக்கப்படும்.
தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் இனி, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு செல்ல தேவையில்லை. கிளாம்பாக்கம் புதிய முனையத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும்.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் சென்னை கிளாம்பாக்கம் வரும் பேருந்துகள் மட்டும் பயணியர் வசதிக்காக தாம்பரம் வரை இயக்கப்படும். பயணியரை இறக்கிவிட்டதும், கிளாம்பாக்கத்திற்கு திரும்பி, அங்கிருந்து பயணியரை ஏற்றிச் செல்லும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் பூங்கா, கூடுதலாக உள்ள நிலத்தை சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் இடம் கிடைக்கும். இதன் சந்தை மதிப்பு 13,200 கோடி ரூபாய். கோயம்பேடு நிலையம் அமைந்துள்ள இடத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தப் போவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அறிவித்துள்ளது. இதனால், இந்த இடம் அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவது உறுதியாகிறது. மிக அதிக மதிப்புள்ள, மக்களுக்கு சொந்தமான நிலத்தை, தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள 66 ஏக்கரில் பூங்கா அமைக்க வேண்டும்.
-- அன்புமணி, பா.ம.க., தலைவர்.